கடலோரப் பகுதிகளில் மின் நிலையங்கள்-என்.எல்.சி.!

31-power-plant200நெய்வேலி : இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் புதிய மின் நிலையங்கள் அமைக்க நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களை அமைத்து, அங்கு பெறப்படும் நிலக்கரியைப் பயன்படுத்தி, இந்த மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக என என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து நெய்வேலியில், என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது நாட்டில் சுரங்கம், மின்னுற்பத்தி என இரு துறைகளிலும் மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ள ஒரே நிறுவனம் என்.எல்.சி. மட்டுமே.

எனவே இந்த நிறுவனம் நவரத்னா என்ற தகுதியைப் பெற்ற பின்பு, மகாரத்னா என்ற அந்தஸ்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் பழுப்பு நிலக்கரி படிமங்களில் 80 சதவிகிதம் தற்போதைய தொழில் நுட்பத்தால் அகழ்ந் தெடுக்க இயலாத வகையில் மிக ஆழத்தில் உள்ளது.

எனவே நிறுவனத்தின் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள நிலக்கரி மூலம் மின்சக்தி தயாரிக்கும் துறை உட்பட பிற துறைகளிலும் என்.எல்.சி. கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

என்.எல்.சி. 2 -ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் கொதிகலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கந்தகம் நைட்ரஜன் வாயுக்களை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் ஜெர்மன் நாட்டின் தொழில் நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்த உள்ளோம்.

செங்கோட்டை, கம்பம் ஆகிய இடங்களில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்து, வரும் 2012-ம் ஆண்டுக்குள் மின்னுற்பத்தியைத் தொடங்க என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களை அமைத்து, அங்கு பெறப்படும் நிலக்கரியைப் பயன்படுத்தி, இந்திய கடலோரப் பகுதிகளில் மின் நிலையங்களை அமைக்க என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *