அகவிலைப்படி மனைவிக்கு இல்லை : கருவூல அதிகாரியின் உத்தரவு ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை : கணவருக்குரிய பென்ஷனை பெறுவதால், அகவிலைப்படி பெற மனைவிக்கு உரிமையில்லை என்ற அரசு உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், மதிய உணவு அமைப்பாளராக சந்திராபாய் என்பவர் 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது கணவர் கைவினை ஆசிரியராக பணியாற்றி, 1981ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பென்ஷன் பெற்று வந்த இவர், கடந்த 96ம் ஆண்டு ஜூன் மாதம் இறந்தார். அதனால், குடும்ப பென்ஷன் அவரது மனைவி சந்திராபாய்க்கு கிடைத்தது.
குடும்ப பென்ஷன் பெறுவதால், அகவிலைப்படி பெற சந்திராபாய்க்கு உரிமையில்லை எனக் கூறி, கடந்த 97ம் ஆண்டு செய்யாறில் உள்ள கருவூல அதிகாரி உத்தரவிட்டார். நிதித் துறையின் உத்தரவின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் சந்திராபாய் மனு தாக்கல் செய்தார். பின், இம்மனு ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது. வட்டியுடன் பாக்கித் தொகையை வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் கே.வாசுதேவன் ஆஜரானார்.
நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில், “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும். “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவுக்கு எதிராக, அரசு உத்தரவு உள்ளது. எனவே, நிதித்துறைச் செயலர் மற்றும் செய்யார் கருவூல அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *