வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறை, குற்றவாளிகளுக்கு கல்வி அளிக்கும் கூடமாக மாறி வருகிறது.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கத் தான் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.
சிறைச்சாலைகளுக்கு வரும் கைதிகளுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்நிலை மாறி, சிறைச் சாலைகள் நவீன தொழில்கூடங்களாகவும், கல்விக்கூடங்களாகவும் மாறி வருகின்றன.நாட்டில் அனைவரும் படித்தவர்களாக இருக்க வேண்டும். கல்வி அறிவு இல்லாமல் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வித் திட்டங்களை கொண்டு வருகின்றன.
அதனடிப்படையில், சிறையில் படிப்பறிவில்லாமல் இருப்பவர்களையும், படிக்க விருப்பம் உள்ளவர்களையும் சிறைத்துறை நிர்வாகம் கண்டறிந்து, அவர்களை படிக்க வைத்து வருகிறது.இதற்கு முன்னுதாரணமாக, வே<லூர் மத்திய ஆண்கள் சிறை விளங்குகிறது. இங்கு, கடந்த ஆண்டு 392 பேர், பல்வேறு படிப்புக்களை படித்து முடித்தனர்.இந்தாண்டு (2010) 144 பேர் படித்து வருகின்றனர். ஆயுள் தண்டனைக் கைதிகள், ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றவர்கள் என, அனைத்து தரப்பு கைதிகளும் உற்சாகமாக சிறையில் படித்து வருகின்றனர். கடந்தாண்டு, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ., ஒருவரும், பி.சி.ஏ.,மூன்று பேர், சி.ஐ.சி., 84 பேர், சி.எப்.என்., 113 பேர் படித்துள்ளனர். சென்னை பல்கலை மூலம் பி.ஏ., (சரித்திரம்) 29 பேரும், எம்.ஏ., (மனித உரிமை) மூன்று பேரும், எம்.ஏ., (வரலாறு) ஒருவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மூலம் எம்.ஏ., (வரலாறு) 21 பேரும், எம்.காம்., மூன்று பேரும், பி.ஏ., ஆங்கிலம் மூவரும் படித்தனர்.இந்தாண்டு (2010) இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில் எம்.சி.ஏ., ஆறு பேரும், பி.சி.ஏ., 13 பேரும், சி.எப்.என்., 13 பேர் படித்து வருகின்றனர். தமிழ்நாடு ஸ்டேட் போர்டில் எட்டாம் வகுப்பு 36 பேர் படித்து வருகின்றனர்.இது தவிர, சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் கல்வி பெற்றவர்களாக மாற்றுவதற்கு, நூற்றுக்கு நூறு திட்டம் வேலூர் சிறையில் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறையில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத கைதிகளுக்கு எண், எழுத்து குறித்த பாடம், கையெழுத்து போட, படிக்க கற்றுத் தரப்படுகிறது.சிறையில் நடத்திய கணக்கெடுப்பின் படி, கையெழுத்து போடத் தெரியாத, படிக்கத் தெரியாத கைதிகள் 265 பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு, சிறையில் பட்டம் பெற்ற கைதிகள் 20 பேரைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது.தினமும் காலை ரோல்கால் முடிந்த பின், 11.30 மணி வரையும், மதிய உணவுக்கு பின் மாலை வரை இவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இதற்காக கரும்பலகை , புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் மட்டுமல்லாமல், வேலூர் பெண்கள் சிறை மற்றும் அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா பேட்டை, குடியாத்தம் ஆகிய கிளைச் சிறைகளிலும் துவங்கப்பட்டுள்ளது.
Leave a Reply