பெரம்பலூர், ஜன. 26: பெரம்பலூர் அருகேயுள்ள வேலூர் ஊராட்சியில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி கட்டுவதற்கான நிலப் பத்திரத்தை ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை நிர்வாகி ஆ. கலியபெருமாள், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா அண்மையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராம ஊராட்சிக்குள்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில், ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை சார்பில் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்காக 5.50 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.
இந்த நிலத்துக்கான பட்டாவை, மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமாரிடம், ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆ.கலியபெருமாள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு. பழனிசாமி, வட்டாட்சியர் சி. ஜெயராமன், மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நேர்முக உதவியாளர் வெள்ளைசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன், வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Leave a Reply