திருப்பூர், ஜன.28: வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பறும் பள்ளி மாணவர்களிடம் ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க பள்ளி கல்வித்துறை சார்பில் டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, இம்முறையில் ஆங்கில பயிற்சி அளித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உலகமயமாக்கல் காரணமாக தற்போது ஆங்கிலம் என்பது முக்கிய தேவையாக உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் போதுமான அளவில் இல்லை. அதனால், அம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது மிகுந்த தடுமாற்றம் அடைகின்றனர். தவிர, வளர்ச்சியடைந்த நாட்டு மக்களின் ஆங்கில உச்சரிப்புக்கும் தமிழக மாணவர்களின் உச்சரிப்புக்கும் மிகுந்த வேறுபாடுகள் இருப்பதாலும் எதிர்காலத்தில் போட்டித்திறனை சமாளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து, பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களிடையே ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, மற்ற நாடுகளுக்கு இணையாக ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கணினியின் உதவியுடன் ஆங்கில மொழித்திறன் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இம்முறையில் ஆங்கில பயிற்சியளித்தல் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆங்கில வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் திருப்பூர் கேஎஸ்சி அரசு பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் வியாழக்கிழமை நடந்த இப்பயிற்சி வகுப்பில் ஆங்கில மொழியின் முக்கியத்துவம், டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் மூலம் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்துதல் குறித்து நேரடியாகவும், காட்சிகள் மூலமாகவும் விளக்கம் அளிக்கப்பட்டன.
இப்பயிற்சியை மேட்டுப்பாளையம் அரசு பள்ளி ஆசிரியை கவிதா, அன்னூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் மேற்கொண்டனர்.
நிறைவில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட சிடி, டிவிடிக்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புத் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்படும். விரைவில், அனைத்து பள்ளிகளிலும் டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் வசதி ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply