மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: மும்பையில் 2008 நவம்பரில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர், தங்களின் சதித் திட்டத்தைச் செயல்படுத்த டாக்சி ஓட்டுனர்கள் போல, மும்பை நகருக்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊடுருவியவர்கள் யார், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை வெளியிட்டால், அது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தற்போதைக்கு அந்த விவரங்களை வெளியிட முடியாது. உளவுத் துறையினரின் எச்சரிக்கையை அடுத்து, மும்பையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போலீசார் ரோந்து சுற்றுவது அதிகரித்துள்ளதோடு, டாக்சிகளும் கடுமையாக சோதனையிடப் படுகின்றன. போக்குவரத்து போலீசாரும், டாக்சி டிரைவர் களின் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சோதனையிட்டு வருகின்றனர். வெளிநாட்டவர்கள் யாரேனும் முறையான ஆவணங்கள் இன்றி தங்கி உள்ளனரா என்பதை கண்டறிய, ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ் களில், சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க, மும்பை போலீசின் அனைத்து பிரிவினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply