‘தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

posted in: மற்றவை | 0

02mrkசிதம்பரம்,​​ பிப்.​ 1:​ கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் 3311 கே.வி.​ துணைமின் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.​ விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:

இத் துணை மின் நிலையம் மூலம் இப் பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராமங்கள் பயன்பெறும்.​ 475 விவசாயிகள்,​​ 30 தொழிலகங்கள்,​​ 6100 வீடு மற்றும் வணிக நிறுவனங்கள்,​​ 85 குடிசைச் தொழில்கள்,​​ 4 ஆயிரம் குடிசை வீடுகள் மின்சார பற்றாக்குறை,​​ குறைந்த மின் அழுத்தம் இன்றி பயன்பெறுகின்றன.

இந்த புதிய துணை மின் நிலையம் மூலம் 3 லட்சத்து 86 ஆயிரம் யூனிட் சேமிக்கப்படும்.

சிதம்பரம் துணை மின்நிலையம் 2,30,110 கே.வி.​ தானியங்கி துணை மின் நிலையமாக உயர்த்தப்படவுள்ளது.​ திருமுட்டம்,​​ வானமாதேவி,​​ பின்னத்தூர்,​​ புவனகிரி,​​ வளையாமதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் திறன் உயர்த்தப்படுகிறது.​ 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.​ அடுத்து வந்த ஆட்சியில் மின்உற்பத்திக்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தற்போது மின்பற்றாக்குறை ஏற்பட்டது.

திமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் அதிகம் தொடங்கப்பட்டதால் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது.

மேலும் இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளதால் குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.​ இதனால் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இரு இடங்களிலும்,​​ விழுப்புரம்,​​ திருவள்ளுவர் மாவட்டங்களில் மின் உற்பத்தி திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்துப் பேசியது:​

அமைச்சர் அளித்த சொந்த இடமான 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் இந்த துணை மின் நிலையம் ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

விழாவில் விழுப்புரம் தலைமைப் பொறியாளர் பி.கே.சண்முகம் வரவேற்றார்.​ சிதம்பரம் மின்கோட்ட செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் நன்றி கூறினார்.​ பேரூராட்சி மன்றத் தலைவர் எஸ்.கணேசமூர்த்தி,​​ ஒன்றியக் குழு துணைத்தலைவர் அ.சின்னப்பா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.​ மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன்,​​ ஒன்றியக் குழுத் தலைவர்கள் இரா.மாமல்லன் ​(குமராட்சி),​​ முத்துப்பெருமாள் ​(பரங்கிப்பேட்டை)​ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *