புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் தலையிட்டு நிர்வாகத்தை மாற்றி, புதிய அதிகாரிகளை நியமிக்கும்படி அந்நிறுவன ஊழியர்கள் அசோசியேஷன், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களாக பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., – ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இவற்றில் தகவல் தொடர்புத்துறை சார்ந்த பி.எஸ்.என்.எல்., சமீபகாலமாக பொதுச்சந்தையில் சரிவைச் சந்தித்து வருகிறது.
இதனால், தகவல் தொடர்புச் சந்தையில் முதலிடத்தில் இருந்த பி.எஸ்.என்.எல்., இப்போது பாரதி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களை அடுத்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.நிறுவன வருமானமும் கணிசமான அளவில் குறைந்து விட்டது.
2008-09ம் நிதியாண்டில் 12 சதவீதம் அளவுக்கு அதாவது 33 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆனால், மொபைல் போன் சந்தையில் மட்டும் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது.இந்நிலையில், நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறையால் தான் பி.எஸ்.என்.எல்., சரிவைச் சந்தித்து வருகிறது என்று அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அனைத்திந்திய பட்டதாரி பொறியாளர் டெலிகாம் அதிகாரிகள் அசோசியேஷன் தலைவர் சிலோகு ராவ் கூறுகையில், “பி.எஸ்.என்.எல்.,ன் மேல்மட்டத்தில் சரியான நிர்வாகம் இல்லை. இதில் தலையிடுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பிரதமரின் ஐ.டி., துறை ஆலோசகர் சாம் பிட்ராடோவைச் சந்தித்து பிரச்னைகளை விளக்க உள்ளோம்’ என்றார்.
மற்றொரு ஊழியர்கள் அமைப்பான சஞ்சார் நிகாம் செயல் அலுவலர் அசோசியேஷனும் பிரதமர் அலுவலகத்துக்கு நிறுவனத்தின் மேல்மட்ட அதிகாரிகளின் தகுதி குறித்து கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளது.
Leave a Reply