அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

posted in: கல்வி | 0

6125தமிழகம் முழுவதிலும் செயல்படும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை கண்டறிந்து, அப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் 27 நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளை உடனடியாக மூடிட வலியுறுத்தி, மாவட்ட தொடக்கக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் தெருவுக்கு தெரு ஏராளமான தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல பள்ளிகள் கட்டண வசூலில் மட்டுமே குறியாக உள்ளன. சிலர் தங்கள் வீட்டு ஹாலையே பள்ளியாக பயன்படுத்தி வருகின்றனர்.

காலை முதல் மாலை வரை காற்றோட்டம் இல்லாத இந்த அறைகளில் ஆட்டு மந்தைகள் போல் அடைக்கப்படும் பிஞ்சு குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இங்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எந்தவித ஆசிரியர் பயிற்சியும் பெறாதவர்கள். சாதாரண விளையாட்டுக் கருவிகளை வைத்து சிறிது நேரம் பாடம் நடத்தி விட்டு, தூங்க வைத்து விடுவதுதான் இவற்றில் சில பள்ளிகளின் பயிற்சி முறை. கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில், வேறு வழியில்லாமல் இது போன்ற பள்ளிகளில் குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். பெற்றோர் திரும்பி வரும் வரை நான்கு சுவர்களுக்குள் சிக்கி குழந்தைகள் தவிக்கும் நிலைமை உள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இவற்றில் சில பள்ளிகளில் திடீரென ஏதாவது சிறு விபத்து நடந்தாலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். மாவட்ட தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பள்ளிகளில் பல வெளியில் தெரியாமல் சிறு வீதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இவற்றை தேடிக் கண்டுபிடிப்பது, உதவி கல்வி அலுவலர்களுக்கு சவால் ஆன பணியாக உள்ளது. இதனால் பல பள்ளிகள், அரசிடம் உரிய அங்கீகாரம் பெறாமல் ஜாலியாக செயல்பட்டு வருகின்றன. அங்கீகாரம் பெற்ற பள்ளிகளும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கிடையாது.

இப்பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வி அலுவலர்களை பள்ளி நிர்வாகிகள் ‘கவனித்து’ விடுவதால், அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே இருந்து வந்தது. இவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி முடுக்கி விட்டுள்ளார்.

எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதால், இப்பள்ளிகளின் அங்கீகாரம், வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் ஆய்வு மூலம் சேகரிக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 288 நர்சரி, பிரைமரி பள்ளிகள் செயல்பட்டு வருவது இந்த ஆய்வில் தெரிய வந்தது. இதில் 27 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த அதிர்ச்சியான விபரமும் வெளியானது. இப்பள்ளிகளை உடனடியாக மூடிட, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், ‘தங்கள் பள்ளி அரசு அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அரசு அங்கீகாரம் பெறாத காரணத்தால், தங்கள் பள்ளியின் பெயர் பலகையை உடனடியாக அகற்றி விட்டு, தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்று செயல்படும் வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும். மாணவர்கள் எந்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர் என்ற விபரத்தை, ஒரு வாரத்துக்குள் தெரியபடுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இது பற்றி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(டி.இ.இ.ஓ) சந்திரசேகரன் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 288 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 27 பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரம் பெறாமலே இயங்கி வந்துள்ளன. பள்ளியை துவக்கக் கூட அனுமதி பெறாமல் இருந்துள்ளனர். இப்பள்ளிகள் உடனடியாக மூடப்படும். இது போல் மேலும் பல பள்ளிகள் இருக்கலாம். அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பள்ளிகளில் 25 சதவீத பள்ளிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ளன. அப்பள்ளிகளுக்கும் கால அவகாசம் அளித்து அங்கீகாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, சந்திரசேகரன் கூறினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஆய்வு நடத்தி கண்காணிக்க, தற்போது ஒரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மட்டுமே உள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிறு, சிறு தெருக்கள், சந்துகளில் அங்கீகாரம் பெறாமல் பாதுகாப்பின்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் அலுவலர்களின் ஆய்வில் தென்பட வாய்ப்பில்லை. ஆகவே கூடுதல் அலுவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பெற்றோரே…உஷார்!

இது போன்ற பள்ளிகள் வெளியில் தெரியாமல் செயல்படுவதற்கு, பெற்றோர்தான் காரணம். வீட்டின் அருகில் செயல்பட்டு வருவதால், தங்கள் வசதிக்காக அங்கு குழந்தைகளை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன், அங்கீகாரம் பெற்ற பள்ளிதானா என்பதை பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்காலிக வசதிக்காக அப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால், நாளை அப்பள்ளியில் ஏதாவது விபத்து நடந்தாலோ, மூடப்பட்டாலோ வீணாக தவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அங்கீகாரம் பெறாத 27 பள்ளிகளின் பட்டியல்: டி.இ.இ.ஓ., தகவல்

1. மை பிளே ஸ்கூல், பேரூர்.
2. சி.பி.ஓ.யு.ஸ்கூல், கோவைப்புதூர், பேரூர்.
3. சக்தி ஸ்கூல், சுந்தராபுரம், பேரூர்.
4. ஏர்லி வேர்ல்டு ஸ்கூல், குனியமுத்தூர்.
5. நாராயணா மிஷன் ஸ்கூல், குனியமுத்தூர்.
6. சி.பி.எம்.ஸ்கூல், கோவைப்புதூர், பேரூர்.
7. லீனா நர்சரி, பிரைமரி ஸ்கூல், செல்லப்ப கவுண்டர் புதூர், தொண்டாமுத்தூர்.
8. சுகனேஷ் நர்சரி, பிரைமரி ஸ்கூல், கல்வீரம்பாளையம், தொண்டாமுத்தூர்.
9. ஆப்பிள் கிட்ஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல், வடவள்ளி, தொண்டாமுத்தூர்.
10.லிட்டில் ஆன்ட்ஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல், தொண்டாமுத்தூர்.
11.சைல்டு விகாஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல், தொண்டாமுத்தூர்.
12.பியூச்சர் கிட்ஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல், தொண்டாமுத்தூர்.
13.அன்னை நர்சரி பிரைமரி ஸ்கூல், சுங்கம், ஆழியார், ஆனமலை.
14.கிங்ஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல், ஆழியார் அணை, ஆனமலை.
15.அலமேலு மங்கை நர்சரி பிரைமரி ஸ்கூல், சோமாந்துறை, ஆனமலை.
16.கலைமகள் நர்சரி ஸ்கூல், ஆழியார், ஆனமலை.
17.செயின்ட் பால்ஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல், ரொட்டிக்கடை, வால்பாறை.
18.பாரதி கலாபவன் நர்சரி பிரைமரி ஸ்கூல், கிணத்துக்கடவு.
19.குட்ஸ் ஷெப்பர்டு நர்சரி பிரைமரி ஸ்கூல், சூலூர்.
20.பாரதி நர்சரி பிரைமரி ஸ்கூல், இருகூர், சூலூர்.
21.கோபாலகிருஷ்ணா நர்சரி பிரைமரி ஸ்கூல், இருகூர், சூலூர்.
22.ஓவியா நர்சரி பிரைமரி ஸ்கூல், குளத்தூர், சூலூர்.
23.சத்திய நாராயணா நர்சரி பிரைமரி ஸ்கூல், சூலூர்.
24.சி.எம்.எஸ். நர்சரி பிரைமரி ஸ்கூல், பள்ளபாளையம், சூலூர்.
25.சுரபி நர்சரி பிரைமரி ஸ்கூல், பொள்ளாச்சி.
26.குட்ஸ் ஷெப்பர்டு நர்சரி, பிரைமரி ஸ்கூல், சிறுமுகை, காரமடை.
27. ராயல் பன்ட் நர்சரி பிரைமரி ஸ்கூல், சிறுமுகை, காரமடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *