ரோட்டில் காஸ் டேங்கர் கவிழ்ந்ததால் பாதிப்பு தொடர்கிறது:2 நாள் போக்குவரத்து அவதி: பள்ளி, கல்லூரிகள் மூடல்

posted in: மற்றவை | 0

tblsambavamnews_85102480650கருமத்தம்பட்டி:கோவை அருகே என்.எச். 47 ரோட்டில் கவிழ்ந்த காஸ் டேங்கர் லாரி இரண்டு நாட்களாக அப்புறப்படுத்த முடியாமல் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எளிதில் தீப்பிடிக்க கூடிய காஸ் இருந்ததால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.கேரள மாநிலம், கொச்சி சுத்திகரிப்பு ஆலையிலிருந்து, “புரோப்பிலின்’ என்ற திட வாயு 15 டன், ஒரு டேங்கர் லாரியில் ஏற்றப்பட்டு, மும்பையில் உள்ள ஒரு உர தயாரிப்பு நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் இந்த டேங்கர் லாரி கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே சென்ற போது, கோவை நோக்கி ஒன்றையொன்று முந்திக் கொண்டு வந்த ஒரு பொலீரோ கார் மற்றும் டெம்போ மீது மோதாமல் தவிர்க்க திரும்பிய போது, எதிர்பாராமல் நடுரோட்டில் கவிழ்ந்தது.இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்த லாரியில் நிரப்பியிருந்த திடவாயு (புரோப்பலின்) எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால், மிகுந்த பாதுகாப்புடன் தான் லாரியை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால், லாரியின் அருகே யாரையும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. வெயில் நேரத்தில் டேங்கரில் உள்ள காஸ் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தீயணைப்புத் துறையினர் டேங்கர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து குளிர்வித்தனர்.ரோட்டில் கவிழ்ந்த லாரியை மீட்க நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பள்ளி கல்லூரிகள் மூடல்: லாரி மீட்புப் பணிக்காக நேற்று காலை லாரி கவிழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள ஐந்து கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று நேற்று முன்தினமே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.நேற்று பகல் 12.00 மணியளவில் மீட்பு பணிக்கு கிரேன் வரும் போது அங்குள்ள ஒரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்: கோவையிலிருந்து அவினாசி நோக்கிச் செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம் வழி மற்றும் அன்னூர், கருவலூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.கோவை நோக்கி வந்த பஸ்கள் அவினாசியிலிருந்து கருவலூர் மற்றும் அன்னூர் வழியாகவும், டவுன் பஸ், கார் போன்றவை வடுகபாளையம் வழியாகவும் திருப்பி விடப்பட்டன. அங்குள்ள குறுகலான திருப்பத்தில் லோடு ஏற்றிய ஒரு லாரி பழுதடைந்து நின்றது. இதனால், பெரும் சிரமம் ஏற்பட்டது.கிட்டாம்பாளையம் மற்றும் விராலிக்காடு பகுதியில் மாற்று வழியில் சென்ற கன்டெய்னர் லாரிகள் உரசியதில் மூன்று இடங்களில் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு, மின் சப்ளை நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *