புதுடில்லி : “பருவ நிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான அமைப்பு (ஐ.பி.சி.சி.,) நடவடிக்கைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது;
விஞ்ஞானி பச்சோரிக்கு முழு ஆதரவு உண்டு’ என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஐ.பி.சி.சி., வெளியிட்ட அறிக்கையில், புவி வெப்பமயமாதலால், இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி, வரும் 2035ம் ஆண்டு காணாமல் போகுமென அறிக்கை வெளியிட்டு, பலவித சர்ச்சைகளுக்கு ஆளானவர் ஆர்.கே.பச்சோரி. இவரது தலைமையிலான ஐ.பி.சி.சி.,க்கு ஆதரவளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து, எரிசக்தி ஆய்வு மையம் ஏற்பாடு செய்த, டில்லி நீடித்த வளர்ச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் கூறியதாவது: பருவ நிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் உலகளவிலான ஒருமித்த கருத்து எட்டாதது, வருந்தத்தக்கது. எதிர்காலத்தில் அதிகளவிலான கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த, தொழிற்சாலைகள் நிறைந்த நாடுகள் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும்; குறிப்பாக வரலாற்று ரீதியாக, இதற்கு பொறுப்பு வாய்ந்த வளர்ச்சியடைந்த நாடுகள், துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளும், தங்களால் இயன்ற அளவு கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
பருவ நிலை மாற்றத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் சிறிய தீவுகள் மீது, தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்தியா, வரும் 2020ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலான கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல், நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்கவும் தீர்மானித்துள்ளது. அதற்கு நிலையான வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். பருவ நிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான அமைப்பான (ஐ.பி.சி.சி.,), இமயமலைப் பகுதிகளில் காணப்படும் பனிமலைகள் உருகி காணாமல் போகும் என அறிக்கை வெளியிட்டு பலவித சர்ச்சைகளுக்கு ஆளானது. இந்த குற்றச்சாட்டுகளால், அந்த அமைப்பு மேற்கொண்ட பல்வேறு பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது.
ஐ.பி.சி.சி.,யின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தலைமை மீது இந்தியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்தியா ஐ.பி.சி.சி.,க்கு ஆதரவளிக்கும் எரிசக்தி ஆய்வு மையமான, “டெரி’ பச்சோரியின் தலைமையின் கீழ், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பில், மிகுந்த மரியாதை மற்றும் சர்வதேச அளவிலான பாராட்டை பெற்றது. வரும் 2022ம் ஆண்டு, 20 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டம் ஒன்று, தேசிய செயல் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ளது. அதே போன்று, தேசியளவிலான மேம்படுத்தப்பட்ட எரிசக்தி திறனுக்காக, தேசியளவிலான திட்டம் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதன் மூலம் கார்பன் வெளியீடு பெருமளவு கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு பிரதமர் கூறினார்.
உலகத் தலைவர்கள் ஆதரவு: ஐ.பி.சி.சி., தலைவரான பச்சோரிக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூடான் பிரதமர் ஜிக்மே தின்லி கூறுகையில், “இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பனிப்பாறைகள் வரும் 2035ம் ஆண்டு உருகி காணாமல் போகும் என்ற ஐ.பி.சி.சி., யின் அறிக்கையால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், நாங்கள் பூடான் பகுதியில் ஏராளமான சுற்றுச்சூழல் மாற்றங்களை பார்த்து வருவதோடு, அவற்றை உணர்கிறோம்’ என பச்சோரிக்கு ஆதரவாக பேசினார். இதே போன்று நார்வே, கிரீஸ், பின் லாந்து நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும், புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் மட்டம் உயர் தல் ஆகியவை தொடர்பான ஐ.பி.சி.சி.,யின் அறிக்கைக்கு ஆதரவாக பேசினர்.
Leave a Reply