கொள்ளை லாபம் அடிப்பதை அனுமதிக்க மாட்டோம்: கல்வி நிறுவனங்களுக்கு கபில் சிபல் எச்சரிக்கை

posted in: கல்வி | 0

11kapilபுது தில்லி,​​ பிப்.10:​ கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாகக் கருதி கொள்ளை லாபம் அடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

கல்வி என்பது லாப நோக்கம் இல்லாத ஒரு புனிதமான பணி.​ வேறெந்த தொழிலில் லாபம் எதிர்பார்க்கும் வர்த்தகர்கள்,​​ கல்விப் பணியில் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.​ அமைச்சராக தான் இருக்கும் வரையில் இவ்விதம் லாபம் சம்பாதிப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

தில்லியில் இந்திய தொழில்வர்த்தக சபை சம்மேளனங்களின் மகளிர் கூட்டமைப்பு ​(ஃபிக்கி)​ “மாறிவரும் இந்திய கல்விச் சூழல்’ என்ற கருத்தரங்கின் கலந்துரையாடலில் கபில் சிபல் கூறியது:

கல்வி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கக் கூடாது என்று கூற மாட்டேன்.​ அவ்விதம் சம்பாதிக்கும் லாபத்தை மீண்டும் கல்விப் பணியிலேயே செலவிட வேண்டும்.​ கல்வி மேம்பாட்டுக்கு அது பயன்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்விக்காக,​​ கல்வி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடலாம் என்பதற்கு அனுமதிக்க முடியாது.​ கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் வருவாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் டிவிடெண்ட் அளிப்பதை ஏற்க முடியாது.​

கல்வியை லாபம் தரும் தொழிலாக அரசு அறிவிக்காததன் காரணம் இப்போதாவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த உலகில் எந்த ஒரு நாடும் கல்வி மூலம் லாபம் ஈட்டுவதை அனுமதித்ததாகத் தெரியவில்லை.​ ஹார்வர்ட் பல்கலைக் கழகம்,​​ யேல் பல்கலைக் கழகம்,​​ ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் ஆகியன அனைத்துமே அறக்கட்டளையாகும்.​ ஸ்டான்ஃபோர்ட் பிரபலமானதற்குக் காரணமே அவரது தயாள குணம்தான்.​ அவர் தொழிலதிபராக அறியப்படவில்லை.​ கல்வியாளராகத்தான் பிரபலமானார்.

எதிர்வரும் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட சிபல்,​​ அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால் ஒதுக்கீடுகளும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்காது என்றும் கூறினார்.

கல்வி முதலீடு என்பது,​​ அறிவுசார் சொத்தாகும்.​ நாட்டில் பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் 88 சதவீதம் பேர் கல்லூரிப் படிப்பை எட்டுவதில்லை.​ ​

ஆராய்ச்சி மற்றும் முன்னோடி கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் பல்கலைக் கழகங்களை அங்கீகரிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.​ ​

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கல்வி நிறுவனங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன.​ அதற்கு உரிய கட்டமைப்பு மற்றும் சாதமான சூழலை ஏற்படுத்திய பிறகே அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமலில் உள்ள பயிற்றுவிப்பு முறை மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.​ ​

செமஸ்டர் தேர்வு முறைக்கு பல பல்கலைக் கழகங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேட்டதற்கு,​​ மாற்றங்கள் கொண்டு வரப்படும்போது இதுபோன்ற எதிர்ப்புகள் கிளம்புவது சகஜமானது என்று அவர் குறிப்பிட்டார்.​ ​

ஏற்கெனவே உள்ள அரசு பள்ளிக் கட்டடங்களை தனியார் துறையினர் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்று கபில் சிபல் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *