பிளஸ் 2,​ எஸ்எஸ்எல்சி தேர்வு: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை

posted in: கல்வி | 0

12thangamசென்னை,​​ பிப்.​ 11:​ பிளஸ் 2,​ எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி,​​ அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,​​ மாவட்டக் கல்வி அலுவலர்கள்,​​ தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்கள்,​​ அரசு தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் வசுந்தராதேவி,​​ தொடக்கக் கல்வி இயக்குநர் தேவராஜன்,​​ மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மணி மற்றும் இணை இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பிளஸ் 2 தேர்வு:

மார்ச் 1-ம் தேதி தொடங்கும் பிளஸ் 2 தேர்வை 5233 பள்ளிகளைச் சேர்ந்த 6.89 லட்சம் மாணவ-மாணவியர் எழுதுகின்றனர்.​ மாநிலம் முழுவதும் 1809 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.​ ​

எஸ்எஸ்எல்சி தேர்வு:

மார்ச் 23-ம் தேதி தொடங்கும் எஸ்எஸ்எல்சி தேர்வை 2791 தேர்வு மையங்களில் ​ 8.56 லட்சம் மாணவ-மாணவியர் எழுதுகின்றனர்.​ ​

ஆய்வு அலுவலர்கள் கூட்டத்தில்,​​ வினாத்தாள் வாங்கிச் சென்று தேர்வு நடத்தி முடித்தபிறகு,​​ விடைத்தாள்களை அந்தந்த மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதேபோல தேர்வுகளில் பங்கேற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்,​​ அறைக் கண்காணிப்பாளர்,​​ பறக்கும் படை மற்றும் வினாத்தாள் கட்டு காப்பாளர்களுக்கான பணிகள் குறித்த விளக்கக் கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்தக் கையேட்டை எடுத்துச் சென்று தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.​ விரைவில் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு குறித்த விளக்கக் கூட்டம் நடக்கவுள்ளது.

தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுப்பதற்காக பறக்கும்படையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதில், ​​ பள்ளிக்கு செல்லும்போது குழுவாகச் செல்ல வேண்டும்.​ மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது.​ சந்தேக மாணவர்களை சோதனையிடலாம்.​ தேர்வில் மாணவர் காப்பி அடித்திருப்பது தெரியவந்தால் அதுபற்றி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தெரியப்படுத்த வேண்டும்.​ ​

6 வகை ஆதாரங்கள்:

மேலும் காப்பி அடிக்கும் மாணவர் பிடிபட்டால் அதுபற்றி 6 வகையான ஆதாரங்களை பதிவு செய்ய வேண்டும்.​ விடைத்தாள்,​​ மாணவரின் ஒப்புதல் வாக்குமூலம் உள்ளிட்ட 6 ஆதாரங்களை திரட்டி தர வேண்டும்.

மாணவர் காப்பி அடிப்பது தொடர்பான விவரத்தை முதன்மைக் கல்வி அலுவலர்,​​ தொடக்கக் கல்வி அலுவலரிடம் தினந்தோறும் தெரியப்படுத்த வேண்டும்.

துண்டுத்தாள் வைத்திருந்தும் காப்பி அடிக்காமல் இருத்தல்,​​ காப்பி அடித்தல்,​​ விடைத்தாள்களை மாற்றிக் கொள்தல் போன்றவைகளுக்குத் தனித்தனி தண்டனை வழங்கப்படும்.​ காப்பி அடிக்கும் மாணவர் 3 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது.

காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை:​​

இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது:

கடந்த ஆண்டில் தேர்வு மையங்களில் சில பிரச்னைகள் ஏற்பட்டன.​ இந்த ஆண்டு அவ்வாறு பிரச்னை நேராமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.​ மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.​ தேர்வு மையப் பொறுப்பாளரை நியமிக்கும்போது கவனமாகச் செயல்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *