புதுடில்லி : அந்நிய நேரடி முதலீடு ரூ.1200 கோடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்நிய நேரடி முதலீடு ரூ.1200 கோடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, இந்த குழுவின் அனுமதியை பெறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளுக்கு முன்கூட்டியே அரசு ஒப்புதல் அளிக்கும் கொள்கையை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் யோசனைக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டத்திற்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ.1200 கோடி முதலீடு வரை, அந்நிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு குழுவின் பரிந்துரை ஏற்று நிதி அமைச்சர் ஒப்புதல் அளிக்கலாம் என்று தெரிவித்தார். தற்போது ரூ.600 கோடி வரையிலான திட்டங்களுக்கு நிதியமைச்சரும், ரூ.600 கோடிக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் ஒப்புதல் அளிக்கின்றன. அத்துடன் தற்போது அந்நிய முதலீடு உள்ளிட்ட மொத்த திட்டச் செலவும் அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. நேற்று அளிக்கப்பட்ட ஒப்புதலின்படி இனி ரூ.1200 கோடிக்கு மேல் அந்நிய முதலீடு செய்யப்படும் திட்டங்கள் மட்டும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி ரூ.1200 கோடிக்குள் உள்ள திட்டங்கள் நிதியமைச்சரால் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும். மத்திய அரசின் இந்த முடிவை தொடர்ந்து அந்நிய முதலீடுகள் விரைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply