புதுடில்லி:முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது.
ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளில் அதிக எம்.பி.,க்களை கொண்ட கட்சி சமாஜ்வாடி தான். இந்த கட்சிக்கு 22 எம்.பி.,க்கள் உள்ளனர். ஐ.மு., கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் தற்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, முதல்வராவதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலின் போது இட பங்கீட்டு பிரச்னையில் மம்தா பானர்ஜி திடீரென கூட்டணியிலிருந்து விலகினால், அப்போது சமாஜ்வாடி கட்சியின் தயவு தேவைப்படலாம். எனவே, சமாஜ்வாடி கட்சியிலிருந்து சமீபத்தில் அமர் சிங் விலகினாலும், இன்னும் அந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக, உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் விவகாரத்தை கவனிக்கும் திக்விஜய் சிங் நம்புகிறார்.வரும் 2012ல் உத்தரபிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் விரும்புகிறார். இருப்பினும் சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க காங்கிரஸ் விரும்புகிறது.
விருந்து அரசியல்: அதே சமயம் தங்கள் கட்சி பலவீனப்பட்டு விடக் கூடாது என்ற கருத்தில் கட்சித் தலைவர்களுக்கு விருந்து வைத்து அதன்மூலம் கட்சியின் வலுவை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறார் முலாயம் சிங்.அமர் சிங் விலகியதால் ஏற்பட்ட பாதிப்பு குறைவதற்கு முஸ்லிம்களுடன் மேலும் நெருங்க வேண்டும் என்று முலாயமும் அவர் மகன் அகிலேஷும் கருதுகின்றனர்.ஏற்கனவே தாக்கூர் ஜாதித் தலைவர்களை அணிசேர்க்க விருந்துகள் மூலம் முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் முலாயம். தற்போது அடுத்த கட்டமாக முஸ்லிம் தலைவர்கள் ஆதரவைப் பெற சிறப்பு விருந்துகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
Leave a Reply