டெல்லி மேல்சபை எம்.பி.க்கள் மாநிலங்களில் இருந்து, எம்.எல். ஏ.க்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தந்த மாநிலங்களில் காலியாகும் எம்.பி.க்கள் பதவிக்குப் பதிலாக புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி.க் களாக இருந்து வரும் டி.டி.வி. தினகரன், கே.மலைச்சாமி, எஸ்.அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜர், காங்கிரஸ் எம்.பி. சுதர்சனம் நாச்சியப்பன், பா.ம.க. மேல் சபை எம்.பி.யும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ஆகியோர் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்குப் பதிலாக தமிழ் நாட்டில் இருந்து புதிதாக 6 மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த பதவிக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, அ.தி. மு.க. – ம.தி.மு.க. கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு தமிழ் நாட்டில் இருந்து ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். அந்த வகையில் பார்த்தால் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு 138 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே தி.மு.க. கூட்டணி சார்பில் 4 எம்.பி.க்களை தேர்ந்து எடுக்கலாம்.
அ.தி.மு.க.வில் 57 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ம.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு கொடுத்தால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 73 ஆகும். எனவே இந்த கூட்டணி சார்பில் 2 பேர் மேல்சபை எம்.பி.க்கள் ஆக முடியும்.
தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் 4 எம்.பி.க்களில் 2 பேர் தி.மு.க. சார்பிலும் 2 பேர் காங்கிரஸ் சார்பிலும் நிற்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி 2 கட்சிகளும் சமமாக சீட்களை பிரித்துக் கொண்டால் காங்கிரஸ் சார்பில் தங்கபாலு டெல்லி மேல்சபை எம்.பி. ஆகலாம்.
இது போல அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 2 பேர் மேல்சபை எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் ஒரு சீட் அ.தி.மு.க. வுக்கும், மற்றொரு சீட் ம.தி. மு.க.வுக்கும் ஒதுக்கப்படலாம் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ம.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கிடைத்தால் வைகோ டெல்லி மேல்சபை எம்.பி. ஆவார்.
Leave a Reply