கும்மிடிப்பூண்டி : சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகாசன சாம்பியன் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவனும், மாணவியும் தங்க பதக்கம் வென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கரநாராயணன், சாரதா தம்பதி மகன் கிருஷ்ணா(15). 10ம் வகுப்பு படித்து வருகிறார்.கும்மிடிப்பூண்டி சூரியநாராயணன், புஷ்பலதா தம்பதியின் மகள் சந்தியா(13). எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சந்தியா, கிருஷ்ணா பயின்று வருகின்றனர். இருவரும் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் கைரளி யோகா மையத்தில், நான்கு ஆண்டு காலமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.கடந்த வாரம் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகாசன சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியில், இந்தியா சார்பில் கலந்துக்கொள்ள இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் நடந்த போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.போட்டியில் வயது வாரியாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மூன்று வகை போட்டிகள் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியே நடத்தப்பட்டன. 12 முதல் 15 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்கள் வென்றார்.பன்னிரெண்டு முதல் 15 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்ட சந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்றார். நாடு திரும்பிய இருவருக்கும் பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன், சக மாணவர்கள், குடும்பத்தார் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Leave a Reply