அனைத்து தரப்பினரும் சம்மதித்தால் மட்டுமே அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை :சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_10995119811நாகர்கோவில்:அனைத்து தரப்பினரும் சம்மதித்தால், அரசு டாக்டர்கள் தனியாக பிராக்டீஸ் நடத்துவதற்கு தடை விதிப்பது பற்றி அரசு பரிசீலிக்கும்,என்று சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மற்றும் பெரம்பலூர் மருத்துவக் கல்லூரிகளில், அடுத்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மாநிலத்தில் தற்போது 1,533 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 6,118 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2009-10ம் ஆண்டில் மருத்துவத் துறைக்கு, 3,391 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 636 கோடி ரூபாய்க்கு மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சை கிடைப்பதாகக் கூறுவது தவறு. பன்றிக் காய்ச்சல் வந்தபோது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறக்கும் தருவாயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, காப்பாற்றப்பட்டனர்.

மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களில் 43 ஆயிரத்து 545 பேர் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்காக, 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.”கேரளாவில், அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது போல, தமிழகத்திலும் தடை விதிக்கும் திட்டம் உள்ளதா?’ என கேட்ட போது, அனைத்து தரப்பினரும் சம்மதித்தால், அது பற்றி பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பேட்டியின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *