வாஷிங்டன்: ‘கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தின் படி, 191.3 டன் அளவு தங்கத்தை, விரைவில் விற்பனை செய்ய உள்ளோம்’ என, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது.
ஏழை நாடுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, சர்வதேச நிதியம், தன் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தில் எட்டில் ஒரு பங்கை, அதாவது, 403.3 டன் அளவிலான தங்கத்தை விற்பனை செய்ய உள்ளதாக, கடந்தாண்டு அறிவித்தது. இதன் படி இந்தியா, மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள், மொத்தம் 212 டன் தங்கத்தை சர்வதேச நிதியத்திடம் இருந்து அப்போது வாங்கியது. இதில், கடந்தாண்டு அக்டோபரின் இரண்டு வாரத்தில், அதிகப்பட்சமாக 200 டன் தங்கம் வாங்கிய பெருமை, இந்திய ரிசர்வ் வங்கியையே சேரும்.
இதில், எஞ்சிய 191.3 டன் அளவு தங்கத்தை(ஒரு டன் ஆயிரம் கிலோ ஆகும்), சர்வதேச நிதியம் விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இது குறித்து சர்வதேச நிதியம் சார்பில், நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், ‘தங்கச் சந்தையில் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க, தங்கம் விற்பனை பல கட்டங்களாக நடக்கும்.
வங்கிகள், சர்வதேச நிதியத்திடம் இருந்து நேரடியாக தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்’ என, அறிவிக்கப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள மத்திய வங்கியின் புதிய தங்க ஒப்பந்தத்தின் அடிப்படையில், சர்வதேச நிதியம் தங்கத்தை விற்பனை செய்கிறது. இதன் படி, ஆண்டுக்கு 400 டன் என, கடந்தாண்டு செப்டம்பர் முதல் துவங்கிய ஐந்தாண்டுகளுக்கு, 2,000 டன் மட்டுமே விற்பனை செய்யலாம்.
இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் நிதித்துறை இயக்குனர் ஆண்ட்ரூ ட்வீடி கூறுகையில், ‘கடந்த இரண்டாண்டுகளாக, தங்கத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம், ஒரு அவுன்ஸ், 54 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கினால், வெளிச் சந்தையில் விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது’ என்றார்.
ஆனால் பொருளாதார அறிஞர்கள் கருத்துப்படி, இந்த விற்பனை ஐ.எம்.எப்., கையில் இருக்கும் தங்கம் பணமாக மாறும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத்திற்கு உதவிட வகை செய்யுமே தவிர வேறேதும் பலன்தராது என்று கூறப்பட்டது. அதே சமயம் அமெரிக்க டாலரைக் கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகள், தங்கள் ஆஸ்தியை உயர்த்த இந்த தங்கத்தை வாங்கக் கூடும். மேலும், தங்கம் விலை சர்வதேச அளவில் சிறிது இறக்கம் காணவும் வாய்ப்பிருக்கிறது.
Leave a Reply