“”பணவீக்கத்தில் இருந்து பாமர சாதாரண மக்களை பாதுகாக்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கும். இருந்தாலும், உள்நாட்டில் விவசாய உற்பத்தி குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் விலையேற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
கிராமப்புற மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து விட்டதும் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம்,” என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. முதல் நாளான நேற்று, இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டது. தவிர, சர்வதேச சந்தைகளில் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந் துள்ளன. மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் காரண மாக கிராமப்புற மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இவையெல்லாம் விலைவாசி உயர்வுக்கான காரணம். இருந்தாலும், பணவீக்கத்தில் இருந்து சாதாரண மக்களை பாதுகாக்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கும்.
விவசாயிகளுக்கு கொள்முதல் விலை அதிகரித்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டாலும், மாநில அரசுகளுக்கு, 2002ம் ஆண்டில் என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததோ, அதே விலையில் தான் மத்திய தொகுப்பிலிருந்து பொருட்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெளிச்சந்தையில் 30 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமையை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 36 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை தாராளமாக கிடைக்கும்.
உணவு பாதுகாப்பு: விலைவாசி உயர்வை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோதுமை மற்றும் சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான கெடுபிடிகள் தளர்த்தப் பட்டுள்ளன. விலைகள் சரியான அளவில் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2009-10ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்து வரும் 2010-11ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்பது, 8 சதவீதமாக இருக்கும். 2011-12ல் 9 சதவீத வளர்ச்சியை எட்டும். சிறுபான்மை சமூகத்தினருக்கு கடன் வசதி நல்ல முறையில் செய்து தரப்படுகிறது. குறிப்பாக, 2008-09ல் 82 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சிறுபான்மை சமூகத்தினர் சேர்வது 2007-08ம் ஆண்டில் 7 சதவீதமாக இருந்தது. 2008-09ம் ஆண்டில் 9 சதவீதமாகியுள்ளது.
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம், இந்த ஆண்டு முதல் அமலாகிறது. நாடு முழுவதும், 373 மாதிரி கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. அகண்ட அலைவரிசை இணைப்பு 1,800 கல்லூரிகளிலும், 400 பள்ளிகளிலும் அமைத்து தரப்பட்டுள் ளன. ஏழைகளுக்கான சமையல் எரிவாயு வழங் கும் திட்டமும் சிறப்புடன் இயங்கி வருகிறது. கட்டமைப்பு திட்டங்களை வலிமைப் படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டின் மேற்கு, கிழக்கு பகுதிகளில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டு வருகின்றன. டில்லி – மும்பை சரக்கு ரயில்பாதை திட்டப் பணிகள் துரிதமாக நடக்கின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா மாநிலங்கள் வேகமான வளர்ச்சியை எட்டுவது நிச்சயம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு நடவடிக்கையாக சுவிட்சர்லாந்து நாட்டுடன் மீண்டும் ஒரு உடன் பாட்டை எட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக தற்போது யுரேனிய தாதுப்பொருட்கள் வரவு நிறைய உள்ளன. இதை இறக்குமதி செய்வதில் முன்பிருந்த சிக்கல்கள் இல்லை. இதன் காரணமாக ராஜஸ்தானில் உள்ள இரண்டு அணுசக்தி நிலையங்கள் மீண்டும் முழுவீச்சில் செயல்பட துவங்கியுள்ளன. தவிர ரஷ்யா, மங்கோலியா, நமீபியா, அர்ஜென்டினா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் விரைவில் ஓட்டுரிமை அளிக்கப்படும். அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் ஓட்டளிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.
பெண்கள் மசோதா நிச்சயம்: “”ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய் யும் இரண்டு மசோதாக்கள், பார்லிமென்டில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நடப்புக் கூட்டத் தொடரில் அவை நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்,” என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சுவிட்சர்லாந்து நாட்டுடனான வரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல், அன்னிய நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக வருமான வரி சட்டம் 1961ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: பார்லிமென்டில் ஜனாதிபதி நிகழ்த்திய கூட்டு உரையின் சிறப்பு அம்சங்கள்:
* கடந்த 2008-09ம் ஆண்டு, 6.7 சதவீதமாக குறைந்த மொத்த பொருளாதார வளர்ச்சி, 2009-10ம் ஆண்டு, 7.5 சதவீதமாக இருக்கும்.
* நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வரும் 2010-11ம் ஆண்டு, 8 சதவீதத்தை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் 2011-12ம் ஆண்டு, நாட்டின் பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மத வன்முறை (தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு) மசோதா 2005 இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
* குழந்தைகள், இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் 2009, ஏப்ரல் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
* இந்தியாவின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒழுங்குபடுத்தும் உயர் அமைப்பாக, தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில், விரைவில் அமைக்கப்படும்.
* லாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் 10 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் அவற்றை, பங்குச் சந்தை பட்டியலில் கொண்டு வர, அரசு திட்டமிட்டுள்ளது.
* “ராஜிவ் காந்தி கிராமின் எல்.பி.ஜி., விடாரக் யோஜனா’ என்ற பெயரில், கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு வினியோகிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* எச்1என்1 வைரசால் உண்டாகும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து உருவாக்கப் பட்டுள்ளது. அது இந்தாண்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.
* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்படும்.
Leave a Reply