புதுடில்லி : விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, அரசு நிராகரித்து விட்டது.
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதையொட்டி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சமீபத்தில் கூட்டியிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், “விலைவாசி உயர்வு சாதாரண மக்களை பாதிக்கும் முக்கியமான பிரச்னை. அதுபற்றி பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும். அதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.இந்நிலையில், நேற்று, ஜனாதிபதி உரை முடிந்தவுடன் லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாசுதேவ் ஆச்சார்யா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, “விலைவாசி உயர்வு பற்றி பார்லிமென்டில் நாளையே (இன்று), ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விரிவான அளவில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்றனர். இல்லையெனில், சபை சுமுகமாக நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர்.ஆனால், ஒரு பிரச்னை பற்றி சபையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தினால், அதற்கு ஓட்டெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்பதால், அரசு தரப்பினர் அதை நிராகரித்து விட்டனர்.
இது தொடர்பாக பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பன்சால், நிருபர்களிடம் கூறியதாவது:எந்த தீர்மானத்தையும் கண்டு அரசு பயப்படவில்லை. நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். எதைப் பற்றியும் நாங்கள் பயப்படவில்லை. ஆனால், விலைவாசி உயர்வு குறித்த விவாதம் ஒத்திவைப்புத் தீர்மான வரம்பிற்குள் வராது.எனவே, ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. சபையை நடத்த வழிகாட்டும் விதிமுறைகளின்படி, எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ளவில்லை. அதனால், அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தால், அதுபற்றிய விவாதத்தை சபையில் மாலை 4.00 மணிக்குத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் விவாதத்தை இரண்டரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும். 193வது விதியின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் சிறப்பு விவாதங்கள் 7.00 மணி நேரம் வரை நடக்கலாம்.இவ்வாறு பன்சால் கூறினார்.
இதற்கிடையில், பா.ஜ.,வின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் முண்டே கூறியதாவது:ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நாளை (இன்று ) ரத்து செய்விட்டு, விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சியினர் அனைவரும், ஒத்திவைப்புத் தீர்மானம் மூலமாகவே விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால், அரசு தரப்பினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அதன்மீது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒத்திவைப்புத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில், பார்லிமென்ட் நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும்.இவ்வாறு முண்டே கூறினார்.
ஆனால், ராஜ்யசபாவில் குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்கப்படும் என்று, அமைச்சர் பன்சால் தெரிவித்திருக்கிறார்.
Leave a Reply