புது தில்லி, பிப்.24: டீசல் ரயில் என்ஜினில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில் எரிபொருள் சிக்கனத்துக்காக சாட்டிலைட் இணைப்புடன் கூடிய ஜிபிஎஸ் கருவிகளை டீசல் இன்ஜின்களில் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் ரயில் செல்லும் பாதையை துல்லியமாகக் காட்டும். இதனால் எந்த இடத்தில் வேகமாக செல்லலாம், எந்த இடத்தில் வளைவுகள் வரும், எந்த இடத்தில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதைத் தெரிந்து அதற்கேற்ப சீரான வேகத்தில் இன்ஜினை இயக்க முடியும். இதனால் எரிபொருள் சிக்கனமாகும் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய கருவிகள் பொறுத்துவதன் மூலம் 10 சதவீத அளவுக்கு எரிபொருளை சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
10 பெட்டிகளில் சூழல் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் வேகன்கள் துருப்பிடிப்பதைத் தவிர்க்க முடியும், அத்துடன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்று அவர் கூறினார். இந்த கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளில் திடக் கழிவுகள் தனியாக பிரிக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். பருவ நிலை மாறுபாடு தொடர்பாக பிரதமர் அமைத்துள்ள குழுவுடன் இணைந்து எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை ரயில்வேத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இது தவிர, ரயில்வேத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சூழல் காப்பு பூங்காக்கள் மற்றும் வன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். கொல்கத்தாவில் நவ்போரா எனுமிடத்தில் இதுபோன்ற பூங்கா ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் மம்தா குறிப்பிட்டார்.
சூழலைக் காக்கும் வகையில் ரயில்வே குடியிருப்புகள் மற்றும் ரயில்வே அலுவலகங்களில் 26 லட்சம் சிஎப்எல் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply