முகாம்களில் இருந்து 1000 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு குடியேற்றம்

posted in: உலகம் | 0

srilanka விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட சண்டையின்போது சொந்த இடங்களை விட்டு காலி செய்து முகாம்களில் அடைக்கப்பட்டவர்களில் மேலும் சுமார் 1000 தமிழர்கள் அவரவர் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டம் மாந்தே பகுதியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும் கொண்டவேலி பகுதியில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1093 பேரும் அவரவர் ஊர்களில் குடியமர்த்தப்பட்டனர்.

மேலும் 800 அகதிகளை நெடுங்கேணியில் மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

சொந்த வீடு, நிலங்களை விட்டுவிட்டு போர் காரணமாக முகாம்களில் அடைக்கப்பட்ட அனைவரையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது என்றும் அந்த அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, முகாம்களில் அடைபட்டு துயரில் வாடும் தமிழர்களை வடக்குப்பகுதியில் மறுகுடியமர்த்த 2.3 கோடி டாலர் நிதியுதவி தேவைப்படுவதாகவும், மனிதநேயம் மிக்கவர்கள் அந்த பணிக்கு நிதி உதவி செய்யலாம் என்றும் ஐநா அமைப்பின் உணவு, வேளாண் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. முகாம்களிலிருந்து திரும்பி சொந்த ஊருக்கு வரும் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் சொந்த காலில் நிற்கவும் உணவுக்காக யாரையும் எதிர்பார்க்காமல் தம்மையே நம்பி வாழவும் இந்த நிதி உதவி உதவும் என்றும் அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்நிலையில்,வடபகுதியை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களை மறு குடியமர்த்த தேவையான வீடுகளை கட்டித்தரும் பணி எப்போது நிறைவுபெறும் என்பதற்கு காலக்கெடு தெரிவிக்க இயலாது என்று கைவிரித்தார் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக.

போரால் சின்னாபின்னமான பகுதிகளில் தமிழர்கள் மீண்டும் குடியேற வீடுகள் கட்டித்தரும் பணி எப்போது முடியும் என்று டெய்லி மிரர் பத்திரிகை தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர், நான் என்ன கட்டட மேஸ்திரியா அல்லது தச்சுத்தொழிலாளியா அல்லது பொறியாளரா எப்போது வீடு கட்டும் பணி முடிவடையும் என்று சொல்வதற்கு என்று காட்டமாக பேசினார்.

எப்போது வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று கெடு தெரிவிக்க தன்னால் முடியாது என்றும் சொன்னார்.

இதனிடையே முகாம்களில் அடைபட்டு வாழும் தமிழ் அகதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் என்று இலங்கை சுகாதார அமைச்சகம் அறவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *