புதுச்சேரி, பிப். 25: அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முறையை அமல் செய்ய வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கமும் ஆரக்கிள் கல்வி பவுண்டேஷனும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் சுந்தரவடிவேலு மற்றும் பவுண்டேஷனின் ஆசிய பசிபிக் மண்டல இயக்குநர் கிருஷ்ணா சிஸ்ட்லா ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
427 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆன்லைன் கல்வி முறை மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பாட செயற்திட்டங்களை அவர்களின் வகுப்பறை பாடத் திட்டத்தில் இணைக்கவும், கற்பனைத்திறன், தொடர்பு கொள்ளும் திறன், குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன், தொழில்நுட்பத் திறன்கள் உள்பட 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான முக்கியத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளவும் இது உதவும்.
முதல் கட்டமாக மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 450 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் ஸ்மார்ட் பள்ளிகள் என்று பள்ளிக் கல்வி இயக்கத்தால் கருதப்படும் நடுநிலை மற்றும் ஆரம்பநிலை பள்ளிகளைச் சேர்ந்த 550 ஆசிரியர்கள் இப் பயிற்சியைப் பெறுவர்.
புதுச்சேரி நகராட்சித் தலைவி டாக்டர் பி. ஸ்ரீதேவி, கவுன்சிலர் வி. பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply