சர்வதேசப் பொருளாதார மந்த நிலையை அடுத்து தொழில்,வர்த்தகத் துறைகளுக்கு அளித்துவரும் ஊக்குவிப்புகளையும் ரொக்கச் சலுகைகளையும் வரிச் சலுகைகளையும் ஓரளவுக்காவது திரும்பப் பெற வேண்டும், அரசின் செலவைக் கட்டுப்படுத்தி கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுச் செயல்படுத்தினால் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் இப்போதுள்ள நிலையிலிருந்து வளர்ந்து 2010-2011 முதல் 8.75% என்ற அளவை எட்டுவது உறுதி என்றும் அறிக்கை கூறுகிறது.
அரிசி,கோதுமை,பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவற்றின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் உணவுப் பண்டங்களுக்கான விலை உயர்வு பணவீக்கம் மட்டும் 18%-க்கும் மேல் அதிகரித்துவிட்டது.
இந்த நிலைமை இப்படியே நீடித்தால் அரசின் திட்டமிடல்களுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைவதுடன் நம் நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றுக்கும் சந்தையில் மதிப்பு குறையும். வெளிநாட்டு ரொக்கங்களுக்கு இணையான ரூபாயின் மதிப்பு வெகுவாகத் தாழ்ந்துவிடும். இது அயல்நாட்டில் வேலைபார்க்கும் நம் நாட்டவர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பெருத்த இழப்பை ஏற்படுத்தும்.
எனவே விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் அவசரமான, அவசியமான கடமை என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
விலைவாசி உயர்ந்துகொண்டே போனால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு, குடியிருப்பு, துணிமணி, போக்குவரத்து இவற்றுக்கே மக்கள் அதிகம் செலவிட நேரும்.
கல்வி, சுகாதாரத்துக்குச் செலவிட அவர்களுக்குப் பணம் இருக்காது. இது குறைந்தால் நாட்டின் மனித ஆற்றல் வளம் வெகுவாக சுருங்கிவிடும். மக்களிடையே சேமிப்புப் பழக்கமும் போய்விடும். அதனால் நம் நாட்டு தொழில், வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவைப்படும் முதலீட்டை உள்நாட்டிலேயே பெற முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். இந்தக் காரணங்களால் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தொழில்துறை உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் அளித்துவரும் ரொக்க ஊக்குவிப்புகளையும் இதர சலுகைகளையும் படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சி இப்போது பரவலாக எல்லா துறைகளிலும் காணப்படுவதால் இந்தச் சலுகைகளை இனியும் நீடிப்பதால் அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், தேவையில்லாமல் சிலரிடம் ரொக்கம் சேரவே வழிவகுக்கும். உலகின் பல நாடுகளில் பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருகிறது. எனவே நம்நாட்டு ஏற்றுமதிக்கும், உற்பத்திக்கும் கிராக்கி அதிகரிக்கவே செய்யும். எனவே ஊக்குவிப்புகளை ஒரேயடியாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது திரும்பப் பெறுவதே நல்லது என்கிறது ஆய்வறிக்கை.
அரசின் வரி வருவாயிலும் வரியற்ற வருவாய் இனங்களிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது வரிக்குறைப்பு மற்றும் இதர சலுகைகளால் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அரசின் வருவாய் பெருகாமல், செலவு மட்டும் அதிகரிப்பது இரட்டை ஆபத்தைத்தான் உணர்த்துகிறது.
இந்த ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதர வளர்ச்சி வீதம் 7.2% ஆகவும் தொழில்துறை வளர்ச்சி 8.2% ஆகவும் சேவைத்துறை வளர்ச்சி 8.7% ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும் இரண்டு முழு நிதியாண்டுகளுக்குப் பிறகே இந்திய தொழில், வர்த்தகத்துறையில் முழு அளவு மீட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11-ல் 8.75% ஆகவும் 2012-ல் 9% ஆகவும் வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ரபி பருவத்தில் உணவு தானிய விளைச்சல் குறையக்கூடும் என்று உலகமே அறியும் வகையில் அரசு சார்பில் தண்டோரா போட்டதால் பதுக்கல்காரர்களும் கள்ளச்சந்தைக்காரர்களும் அத்தியாவசியப் பண்டங்களில் ஊக வியாபாரம் செய்யவும் பதுக்கவும் வழி ஏற்பட்டுவிட்டது என்கிறது அறிக்கை. கையிருப்பில் உள்ள உணவு தானியம் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க உதவும் என்பது அரசின் சார்பில் மக்களை எட்டும் அளவுக்கு வலுவாக எடுத்துச் சொல்லவே இல்லை என்கிறது அறிக்கை.
சர்க்கரையைப் பொருத்தவரை சுத்திகரிக்கப்படாத சர்க்கரை கணிசமான அளவு இறக்குமதி செய்யப்பட்டும் அதைத் துறைமுகத்திலிருந்தே வெளியே எடுக்காமல் மாதக்கணக்கில் தாமதப்படுத்தியதாலேயே விலை உயர்வு ஏற்பட்டது என்று சாடுகிறது அறிக்கை.
அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இப்போது மக்களின் சேமிப்பும் முதலீடும் கணிசமாக அதிகரித்திருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வெளிநாடுகளுடனான வர்த்தகமும் அதிகரித்து வருவதால் வருவாய் அதிகமாகுமே தவிர குறையாது.
மறைமுக வரிகளில் வருவாய் குறைந்ததற்கு அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கையே முக்கிய காரணம் என்கிறது அறிக்கை.
3-ஜி அலைக்கற்றை ஏலத்தை முடிவு செய்ததில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த ஆண்டு அரசுக்கு வர வேண்டிய வருவாய் 35,000 கோடி ரூபாய் தாமதப்படுவதைச் சுட்டிக்காட்டும் அறிக்கை இன்றைய சூழலில் இந்த வருவாய் இழப்பு அரசுக்கு மிகவும் முக்கியமானது என்கிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6.8% இப்போது அரசின் வருவாய் பற்றாக்குறையாக இருக்கிறது. ரூபாய் மதிப்பில் இது 4 லட்சம் கோடியாகும். அரசு அளித்த ஊக்குவிப்புகளின் மதிப்பு இதில் பாதியாகும். எனவே இந்த சலுகைகள் விலக்கப்பட்டாலே அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும் என்கிறது அறிக்கை.
Leave a Reply