மதுரை:அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்தவர் சொக்கர்.
இவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதற்கான செலவை அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும்படி விண்ணப்பித்தார். திட்டத்தை செயல்படுத்தும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், சிகிச்சைக்கான செலவை வழங்க மறுத்து விட்டது. அதை எதிர்த்து சொக்கர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு மருத்துவ செலவை வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன திட்ட அதிகாரி அப்பீல் மனு செய்தார்.
மனுவை அனுமதித்து நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கிறது. எனவே சில வழிகாட்டுதல்களை அரசுக்கு அளிக்க இக்கோர்ட் விரும்புகிறது.
*பயனாளிகள் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலையில், மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அதற்கான செலவை நிவாரண நிதியாக வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
*குறிப்பிட்ட முறையிலான சில சிகிச்சைக்கு மட்டுமே சிகிச்சைக்கான செலவு வழங்கப்படும் என்பதை மாற்ற வேண்டும்.
*சில மருத்துவமனைகளில் பணம் கட்டினால் மட்டுமே சிகிச்சையளிக்கப்படும் என்ற நிலையிருக்கும். அந்த நிலையில் நோயாளிகள் மருத்துவமனைகளில் செலுத்திய பணத்திற்கு ரசீது பெற்று அரசுக்கு அளித்தால், அதை திருப்பி அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Leave a Reply