தமிழக முதல்வர் அறிவித்த உள் இடஒதுக்கீட்டால் அருந்ததியர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அருந்ததியர் மக்கள் கட்சித் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முதல்வர் கருணாநிதி, அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியுள்ளார். இதனால் தற்போது மருத்துவக் கல்வியில் 56 பேருக்கும் பொறியியல் கல்வியில் 1,165 பேருக்கும் இடம் கிடைத்துள்ளது. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 46 பேருக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் 15 பேருக்கும் ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது.
மேலும், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பு, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அருந்ததியர்களுக்கு இந்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
ஆனால், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர், உள்ஒதுக்கீடு தலித் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று கூறியுள்ளனர். இதை கண்டிக்கிறோம். அவர்கள் மீது கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்வோம். உள்இட ஒதுக்கீடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் பூட்டா சிங் ஆகியோரை சந்தித்து விளக்குவோம்.
இவ்வாறு வலசை ரவிச்சந்திரன் கூறினார்.
Leave a Reply