சொல்லித் தீருவதில்லை வள்ளுவனின் புகழும் திருக்குறளின் மாண்பும். குமரியில், விண்ணைத் தொடும் 133 அடி சிலை நிறுவியும், தடை பல தாண்டி கர்நாடகாவில் சிலை வைத்தும் வான் புகழ் வள்ளுவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது
நம் சமூகம். திருக்குறள், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறையாய் திகழ்வதில் தமிழனுக்கு அசாத்திய பெருமை.அந்த வகையில், ஒரு சிறு முயற்சியாய், ஆயிரத்து 330 குறளுக்கும் ஓவியங்கள் வரைந்து திருக்குறளின் பெருமையை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே பறைசாற்றி வருகிறார் ஓவியர் ஈஸ்வரன்.கோவை, வதம்பச்சேரி எஸ்.சி.எம் பள்ளியின் ஓவிய ஆசிரியரான இவரிடம் பேசியதில்;திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துகளின் பால் கொண்ட ஈர்ப்புதான் என்னை இப்பணியில் ஈடுபடத் தூண்டியது. நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷமான திருக்குறளை, படித்தவர்கள் மட்டுமல்லாமல் பாமரர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவும் மொழி கடந்தும் போற்றப்படவேண்டும் என்பதற்காகவும் இதனை ஓவியமாகப் படைக்க முற்பட்டேன். ஆயிரத்து 330 குறளுக்கும் படம் வரைந்து முடிக்க 3 ஆண்டுகள் பிடித்தது.
திருக்குறளின் அரிய கருத்துகள் நம்மை நல்வழிப்படுத்துபவை. எனவேதான், இதன் பெருமையை குழந்தைகளிடமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, 50-க்கும் மேற் பட்ட திருக்குறள் ஓவியக் கண்காட்சியை பள்ளி, கல்லூரிகளில் நடத்தியுள்ளேன்.2007-ல், அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது எனது பணிகளைப் பாராட்டி கடிதம் எழுதியதுடன், அவர் கோவை வந்தபோது தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்தது எனது இந்தப் பணிக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்கிறார்..குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கையால் “திருக்குறள் சிந்தனை ஓவியர் விருது’ம் நெய்வேலி திருக்குறள் அறக்கட்டளை சார்பில் “திருக்குறள் தூதுரை கண்ணூள் விழைஞர் விருது’ம் பெற்றுள்ள இவர் நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் துணியில் திருக்குறளை ஓவியங்களாக நெசவு செய்ய வேண்டும் என்கிற தனது ஆசையைச் சொன்ன போது, அது அவரது பேராசையாகத் தோன்றவில்லை; தமிழைப் பெருமைப்படுத்தும் ஆசையாக தோன்றியது!.
Leave a Reply