திருச்சி:திருச்சியில் இன்று, “கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை’ தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
தமிழகத்திலுள்ள 21 லட்சம் கூரை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக இலவசமாக கட்டி தரும் திட்டமான, “கலைஞர் வீட்டு வசதித் திட்டம்’ என்ற புதிய திட்டம் துவக்க விழா, திருச்சி ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.கிராமத்து சூழ்நிலையில் விழா நடக்கும் விதமாக, ஆலமரத்தடியில் திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி, சென்னையிலிருந்து இன்று பகல் 1 மணிக்கு விமானம் மூலம், திருச்சி வருகிறார். முதல்வர் கருணாநிதி திட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகிறார்; தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், தலைமை வகிக்கிறார்.விழாவிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணையமைச்சர் நெப்போலியன், தமிழக அரசு தலைமைச் செயலர் ஸ்ரீபதி ஆகியோர், முன்னிலை வகிக்கின்றனர்.விழா அரங்கில் மதியம் 2 மணிக்கு, சிலம்பாட்டம், வாள் சண்டை உட்பட விளையாட்டு நிகழ்ச்சிகளும், 3 மணிக்கு திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. நேற்று, திருச்சி வந்த துணை முதல்வர் ஸ்டாலின், விழா நடக்கும் ஸ்டேடியத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Leave a Reply