சவுண்டையா சவுண்டாகத்தான்’ இருக்கிறது-கருணாநிதி

posted in: அரசியல் | 0

04-karunanithi4-200திருச்சி: மாற்றுத்திறன் உடையோருக்கென ஒரு மாபெரும் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு குடிசைகளுக்கு பதில் 21 லட்சம் இலவச காங்கிரீட் வீடுகள் கட்டும் `கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை’ திருச்சியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி திருச்சியில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,

இங்கே பேசிய நண்பர்களிலே சிலர், இவ்வளவு பெரிய திட்டத்திற்கு பணம் எங்கே என்ற கேள்விக்குறியை ஜாடைமாடையாக தொட்டுக் காட்டினார்கள்.

பணத்திற்கு ஒன்றும் பஞ்சமில்லை. ‘சவுண்டையா சவுண்டாகத்தான்’ இருக்கிறது என்று கிராமங்களிலே சொல்வார்களே அதைப்போல அவர்களுக்கு நான் சொல்கிறேன். சவுண்டையா என்பதைக் குறிப்பிடுகின்ற வகையிலேதான், எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருடைய பெயரும் அமைந்திருக்கிறது, அதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பணத்திற்கு இவர்கள் எங்கும் போகவேண்டியதில்லை, அது `சவுண்டாக’ இருக்கிறது என்பதை நான் எத்தனை முறை அழுத்தி அழுத்திச் சொல்லி உங்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது என்பதை எண்ணித்தான் கொஞ்சம் வருத்தப்படுகிறேன்.

இந்த விழாவிலே இது ஒரு அரசு விழாதானா? ஏழை எளிய மக்களுக்கு குடிசைகளை மாற்றித் தருகின்ற ஒரு விழாதானா? அல்லது ஏற்கனவே நடைபெற்ற இந்தக் கட்சியினுடைய மாநாடு போன்ற ஒரு மாநாடா? என்ற கேள்விகளை நம்முடைய இதயத்திலே எழுப்புகின்ற அளவிற்கு இன்று மாலையிலே எனக்கும் துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலினுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு இங்கே நீங்கள் குழுமியிருக்கின்ற இந்த பெருந்திரளான கூட்டம்- இவைகளையெல்லாம் பார்க்கும்போது நண்பர்கள் சொன்னதைப் போல பணம் எங்கே என்று கேட்டீர்களே, பணம் தேவையில்லை. இந்த `ஜனம்’ இருந்தால் போதும்.

எதிர்க்கட்சி என்றாலே அரசு சொல்கின்ற ஒரு திட்டத்தை அப்படியே ஒத்துக் கொள்ளக் கூடாது. ஏதாவது ஒரு திருத்தத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையிலே நம்முடைய சிவபுண்ணியமானாலும், நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சார்பிலே உரையாற்றிய செல்வி பாலபாரதி ஆனாலும், அவர்களும் இந்த வீடுகளுக்காக ஒதுக்கியிருக்கின்ற அந்த இடம்- அதன் பரப்பளவு இன்னும் கொஞ்சம் அதிகம் இருக்கலாம் என்ற கருத்தை இங்கே சொல்லியிருக்கிறார்கள்.

ஆதரிக்க வேண்டும், அதே நேரத்திலே எதிர்க்கட்சி என்கின்ற அந்த முத்திரையை மறந்து விடாமல் ஒரு சில கருத்துக்களைச் சொல்ல வேண்டும். நீங்கள் எத்தனை யோசனை வேண்டுமானாலும் சொல்லுங்கள். வாருங்கள், வந்து எங்களை வாழ்த்துங்கள். சேர்ந்து செயல்புரிவோம். உங்களை அதற்குத்தான் அழைக்கிறோம்.

அப்படி அழைக்கின்ற நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற உறுப்பினர்கள் ஆனாலும், எங்களுக்கும் அவர்களுக்கும் துணை நிற்பவர்களானாலும் அன்றைக்குத் தோழமையாக இருந்தவர்கள் ஆனாலும், இன்றைக்குத் தோழமையாக இருப்பவர்கள் ஆனாலும், யாரானாலும் வந்து அபிப்பிராயங்களை சொல்லுங்கள். அதனை இந்த அரசு வரவேற்கத் தயாராக இருக்கிறது. அதுதான் நல்ல ‘;பார்லிமெண்ட்’.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் இலவச உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது நான் எதிர்க்கட்சித் தலைவன். அப்போது நான் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தால் அந்த இயக்கத்திற்கு, அந்த அரசுக்கு பெரிய விளம்பரம் கிடைக்குமே என்று எண்ணி அதை எதிர்க்கவில்லை.

நான் என்ன சொன்னேன் என்றால், இந்தத் திட்டத்தில் இன்னின்ன மாறுதல்களைச் செய்யலாம், ஒரேயடியாக அரசாங்கமே சமைத்துப் போடுவதை விட, அதிலே வேலை செய்கின்ற தாய்மார்களுக்கு பணத்தைக் கொடுத்து அந்த உணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டு வந்து சமைக்கச் செய்து, அதை குழந்தைகளுக்குப் போடலாம் என்று ஒரு யோசனையைச் சொன்னேன். சொன்னதற்குக் காரணம் எதிர்க்கட்சி வாயை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. ஆதரிக்கவும் முடியாது, ஆதரிக்காமல் இருக்கவும் கூடாது. இது எதிர்க்கட்சியினுடைய கண்ணியம்.

ஒரு நல்ல காரியம் நடக்கும்போது- இப்போது பாலபாரதிக்கோ, அல்லது சிவபுண்ணியத்திற்கோ சங்கடம் ஏற்படாவிட்டாலுங்கூட, மனதார இங்கே சொல்லியிருக்கிறார்கள். வீட்டை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு ஆளுங்கட்சியாக இருந்தால் யார் நீங்கள் சொல்ல? நான் யார் அதைக் கேட்க என்ற ரீதியிலே உடனடியாக பதில் வரா விட்டாலும் கொஞ்சம் மெல்ல- மெதுவாக பதில் வந்திருக்கும். நடத்தையின் மூலமாக அந்தப் பதில் வந்திருக்கும்.

நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் சொன்ன யோசனையை நல்ல எண்ணத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அதன் வழி நடப்பதற்கு எந்த வகையிலே முயற்சிக்க முடியும் என்பதை நானும் யோசித்து அதை எந்த வகையிலே பயன்படுத்த வேண்டுமோ, எந்த வகையிலே அறிவிக்க வேண்டுமோ அப்படி அறிவிப்பேன்.

இதோடு முடிந்து விடுவதில்லை. இங்கே சொன்னார்கள். இவ்வளவு பெரிய திட்டத்தை அறிவித்து விட்டீர்களே, இதற்கு மேல் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.

இதற்கு மேல் என்ன செய்யலாம் என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு “முரசொலி” யிலே எழுதியிருக்கிறேன்.

ஊனமுற்றவர்களுக்காக இன்றைக்கு சில திட்டங்கள் தமிழக அரசின் சார்பாக- மத்திய அரசின் சார்பாக நடத்தப்படுகின்றன. பல நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவைகள் இன்னமும் சரியான முறையில் எப்படி இது உருவானதோ, உருவான அளவில் அது செய்யப்படவில்லை என்பதற்கு சில ஆதாரங்களை நான் எழுதியிருந்தேன்.

அவர்களுக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. ஊனமுற்றோர்- முதலில் தங்களை ஊனமுற்றோர் என்று கருதக் கூடாது, சொல்லக் கூடாது என்று விரும்புகிறார்கள். உண்மை. ஊனமுற்றோர் என்று ஏன் சொல்ல வேண்டும்? ஊனமுற்றவர்களுக்கு ஒரு காலோ, ஒரு கையோ ஊனமாக இருந்தால், அந்தக் காலும் கையும் செய்ய வேண்டிய வேலையை இன்னொரு காலும், கையும் செய்யும், ஆகவே அவர்களின் திறமை சற்று அதிகம் என்று ஒரு அறிவியல் கூற்று இன்றைக்கு இருக்கிறது.

அந்த அறிவியல் கூற்றை மனதிலே கொண்டு அவர்களை நாம் நோக்க வேண்டும். அந்த அடிப்படையிலே தான் அவர்களைப் பற்றி ஐ.நா. சபையில் 2007ம் ஆண்டு விவாதித்து ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். என்ன ஒப்பந்தம் என்றால், ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி, அவர்களுக்கு வேறு ஒரு பெயர் வைக்கலாம் என்று சிந்தித்து அவர்களுக்கு வைக்கப்பட்ட பெயர் தான் தமிழிலே சொல்ல வேண்டுமேயானால் அவர்களுடைய ஒரு கை போய் விட்டால், இன்னொரு கை அதிகத் திறமையோடு செயல்படும் என்பதை மனதிலே வைத்து – ஒரு காலை இழந்து விட்டால் இன்னொரு கால் மிகுந்த வலிமையோடு செயல்படும் என்பதை மனதிலே வைத்து – அவர்களுக்கெல்லாம் “மாற்றுத் திறனுடையோர்” என்ற மரியாதையான பெயரை, இழிவற்ற ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்.

அந்த மாற்றுத் திறனாளிகளின் நன்மைக்காக ஐ.நா. மன்றத்திலே எல்லா நாடுகளும் ஒத்துக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பந்தம் செய்யப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட அந்த ஒப்பந்தம் இன்னமும் பல நாடுகளில் நடைமுறைக்கு வரவில்லை. அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஏழாவது நாடாக இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. ஆனால் இந்தியா முழுமையும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்தப்படி வசதி வாய்ப்புகள், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனவா என்றால் இல்லை. நான் அதைப் பற்றி இந்த ஆண்டு வெளியிடப்படும் பட்ஜெட்டில் அறிக்கையில்- மத்திய அரசு அன்றைக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றி- இந்தியாவிலே இருக்கின்ற ஊனமுற்றோருக்கெல்லாம் நன்மைகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம்.

இதை நான் சொல்லுகின்ற நேரத்தில் ஏதோ இந்திய அரசை நெருக்கடிக்குத் தள்ளுகிறோம் என்று பொருள் அல்ல. தமிழ்நாடு அரசும் சேர்ந்து தான் இந்திய அரசோடு ஒத்துழைத்து அந்த இயலாதவர்களுக்கு மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படுகின்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற முறையில் தான் அதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே இப்போது ஏழையெளியோருக்கு குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விட பெரிய திட்டம், இந்தத் திட்டம். ஏழையெளியவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டுப் பெறுகிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்தின்படி வருகிறவர்கள் கேட்க பேச்சில்லாதவர்கள்- நம்மைப் பார்த்து சொல்ல வழியில்லாதவர்கள்- வகையில்லாதவர்கள், இன்னும் சொல்லப் போனால் மனநோயாளிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பேசுகிறோம், யாரைப் பார்க்கிறோம் என்று கூடத் தெரியாது. ஆனால் அவர்கள் எல்லாம் மனித ஜென்மங்கள் தான். நம்மைப் போன்ற மனிதர்கள் தான்.

நம்மைப் போன்ற ஜீவன்கள் தான். அந்த ஜீவன்களை ரட்சிக்க வேண்டிய கடமை- அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அந்த உணர்வை நாம் பெறவேண்டும். இதற்கு அடுத்து என்ன என்று கேட்பீர்களேயானால், இந்தத் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போதே, அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வர இந்த அரசு ஆவன செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியையொட்டி திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *