இங்கிலாந்து அரசிடமிருந்து டிசிஎஸ்-ஸுக்கு ரூ. 4150 கோடி ஆர்ட

பெங்களூர்: நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம், இங்கிலாந்து அரசிடமிருந்து ரூ. 4150 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அரசின் பொதுக் கணக்குத் துறைக்காக, தேசிய ஊழியர் சேமிப்பு டிரஸ்ட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் மிகப் பெரிய திட்டம் இது. பத்து வருட காலத்திற்கான ஒப்பந்தம் இது.

இரண்டு கட்டங்களாக இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. முதல் கட்டம் வருகிற அக்டோபர் மாதத்தில் முடியும். ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்திற்காக இந்த டிரஸ்ட்டை இங்கிலாந்து அரசு ஏற்படுத்துகிறது.

அதை வடிவமைத்து, உருவாக்கி நிர்வகிக்கும் பொறுப்பு டிசிஎஸ்-ஸிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அரசின் பொது ஊழியர் கணக்குப் பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது மிகவும் முக்கியமான ஒப்பந்தமாகும் என்றார்.

டிசிஎஸ் தவிர மேலும் மூன்று சர்வதேச ஐடி நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்திற்காக பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும் டிசிஎஸ்ஸுக்கு இது கிடைத்துள்ளது.

தேசிய ஊழியர் சேமிப்பு டிரஸ்ட் என்பது இங்கிலாந்து பென்ஷன் சீரமைப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த சீரமைப்புத் திட்டம் இங்கிலாந்தில் 2012ம் ஆண்டு அமலுக்கு வரவுள்ளது.

இந்தத் திட்டத்தை சிறந்த முறையில் நிறைவேற்றவும், பென்ஷன் பெறத் தகுதியானவர்களை பட்டியலிடவும் தேவையான சாப்ட்வேரை உருவாக்குதல், கட்டமைப்பை ஏற்படுத்தி அதை நிர்வகித்தல் ஆகிய பணிகளைத்தான் தற்போது டிசிஎஸ் செய்து கொடுக்கவுள்ளது.

யார் யார் இந்தத் திட்டத்தில் இடம் பெறுகிறார்கள், எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், சேமிப்பு முறைகள், பண நிர்வாகம், பென்ஷன் சேமிப்பு கணக்குகள், கணக்கு வழக்கு நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் டிசிஎஸ் வகுத்துத் தரும்.

இதுகுறித்து டிசிஎஸ் தலைமை செயலதிகாரி சந்திரசேகரன் கூறுகையில், இது மிகப் பெரிய வெற்றி. அரசுத் துறை தொடர்பாக நாங்கள் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இப்போது இங்கிலாந்து அரசின் மிகப் பெரிய திட்டத்தை செயல்படுத்தித் தரப் போகிறோம் என்பது மிக முக்கியமானது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *