கபில்தேவுக்கு ஐ.சி.சி., கவுரவம்

tblfpnnews_36133974791துபாய் : ஐ.சி.சி., தலைசிறந்த வீரர்களுக்கான “ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் முறைப்படி சேர்க்கப்பட்டார்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக கடந்த 2009ல், உலகின் தலைசிறந்த வீரர்களின் பெயர் “ஹால் ஆப் பேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதில் கிரிக்கெட் சாதனையாளர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. மிகச் சிறந்த “ஆல்-ரவுண்டரான’ கபில்தேவ் பெயர் சேர்க்கப் படாததால் அப்போது பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கபில்தேவ் பெயரும் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கான அங்கீகாரமாக, நேற்று துபாயில் நடந்த விழாவில் ஐ.சி.சி., தலைவர் டேவிட் மார்கன், கபில்தேவுக்கு தொப்பி ஒன்றை நினைவு பரிசாக அளித்தார்.கடந்த 1959ல் சண்டிகரில் பிறந்த கபில்தேவ், 1978ல் இந்திய அணியில் அறிமுகமானார். சுமார் 16 ஆண்டுகளாக விளையாடிய இவர், 1983ல் அணிக்கு உலக கோப்பை பெற்று தந்தார். 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்தார். தவிர 5,248 ரன் எடுத்தார். 225 ஒரு நாள் போட்டிகளில் 253 விக்கெட், 3,783 ரன் எடுத்தார்.

ஐ.சி.சி., கவுரவம் குறித்து கபில் கூறுகையில்,””கவாஸ்கரை முன்மாதிரியாக கொண்டு கிரிக்கெட் விளையாட துவங்கினேன். தற்போது கவாஸ்கர், கிளைவ் லாய்ட், ஹாட்லி, அக்ரம் போன்ற வீரர்களுடன் எனது பெயரும் ஐ.சி.சி., “ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

ஐ.சி.சி., தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில்,””கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரராக கபில்தேவை குறிப்பிடலாம். சிறந்த வேகப்பந்துவீச்சாளர், அதிரடி பேட்ஸ்மேன், அருமையான பீல்டர் என அனைத்து துறைகளிலும் அசத்தினார். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை பைனலில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை மிக நீண்ட தூரம் ஓடி “சூப்பராக’ கேட்ச் பிடித்தார். அதனை எப்போதும் மறக்க முடியாது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *