புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மம்தா, முலாயம் மற்றும் லாலு கோஷ்டியினர், திடீர் திருப்பமாக தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர். “மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்’ என, இவர்கள் பல்டி அடித்துள்ளனர்.
ராஜ்யசபாவில், நேற்று முன்தினம் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான ஓட்டெடுப்பு நடந்த போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த இரண்டு எம்.பி.,க்களும், அதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.இது, ஐ.மு., கூட்டணியில் மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு எதிராக மம்தா காய் நகர்த்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால், இந்த விஷயத்தில் மம்தா நேற்று திடீர் பல்டி அடித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பெண்கள் மசோதா மீதான ஓட்டெடுப்பில் எங்கள் கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறுவிதமாக செய்திகள் வெளியாகின்றன. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. பெண்கள் மசோதா விவகாரம் தொடர்பாக, கூட்டணி கட்சித் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது, இந்த மசோதா தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பெண்கள் மசோதாவில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் எழுப்புவது குறித்து திட்டமிட்டு இருந்தோம்.ஆனால், திட்டமிட்டபடி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே, எங்கள் கட்சி எம்.பி..,க்கள் ராஜ்யசபாவில் நடந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.அதே நேரத்தில், பெண்கள் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் திரிணமுல் காங்கிரஸ் மிகவும் ஆர்வமாக உள்ளது.இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
லாலு, முலாயமும் திடீர் பல்டி :பெண்கள் மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு சவால் விடும் வகையில் பேசிவந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரும் தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர்.பார்லிமென்டில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இவர்கள் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டிருப்பதாகவும் முதலில் தகவல் தந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து முலாயம்சிங் யாதவ் நேற்று கூறுகையில்,”அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் முதலில் எங்களுக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பின் தான், இதுகுறித்து முடிவு எடுக்க முடியும். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டுமெனில், 50க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. எங்கள் கட்சிக்கு 25 எம்.பி.,க்கள் தான் உள்ளனர்’ என்றார்.
லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,”எங்கள் கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். இதை வைத்துக் கொண்டு எப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். இதுகுறித்து வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயம் தொடர்பாக, ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். இன்னும் கிடைக்கவில்லை’ என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என கூறப்பட்ட மம்தா, முலாயம், லாலு ஆகியோர் தற்போது”மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்’என, கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், வரும் 16ம் தேதியுடன் பார்லிமென்ட் கூட்டம் முடிவடைந்து ஒத்திவைக்கப்படும். ஆகவே எப்போது இம்மசோதா லோக்சபாவில் கொண்டு வரப்படும் என்று முடிவாகவில்லை.
பார்லிமென்ட் விவகார அமைச்சர் பன்சால் கூறுகையில், “பட்ஜெட் நிறைவேற்றப்படும் முன், லோக்சபாவில் தாக்கலாக வாய்ப்பிருக்கிறது’ என்றார்.
மம்தாவுடன் காங்., சமாதானம் : காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில்,”வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்கள் மசோதா, லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை. ஆளும்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் தலைவர். மரியாதைக்குரிய பெண். இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு அவர் தனது முழு ஆதரவையும் தருவார் என, நம்புகிறோம். இது குறித்து அவரிடம் பேசி வருகிறோம்’ என்றார்.
Leave a Reply