மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக, பெட்ரோல்-டீசல் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
பட்ஜெட் தொடர்பாக 2 நாட்கள் நடைபெற்ற பொது விவாதத்திற்கு பதில் அளித்து நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதுதான் என்றாலும், நாட்டின் நிதி நிலைமை காரணமாக, விலை உயர்வை திரும்பப்பெற முடியாத நிலை இருப்பதாக விளக்கம் அளித்த பிரணாப் முகர்ஜி, அதற்காக தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரணாப் முகர்ஜி தனது பதில் உரையில் மேலும் கூறியதாவது-
“நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் கோடை கால சாகுபடி உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், கடந்த 5 மாதங்களாக தொழில் துறையில் அடைந்துள்ள இரட்டை இலக்க வளர்ச்சி காரணமாக நமது பொருளாதார நிலைமை மேம்பட்டு வருகிறது.
பட்ஜெட்டில் உற்பத்தி வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருப்பது, பணவீக்க பிரச்சினையில் சில சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன”.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
பிரணாப் முகர்ஜி பதில் அளித்து பேசியதும் அவரிடம் சென்ற முன்னாள் நிதி மந்திரியும் பா.ஜனதா தலைவருமான யஷ்வந்த்சின்கா, பெட்ரோலிய பொருட்களின், குறிப்பாக டீசல் விலை உயர்வு முடிவையாவது மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
Leave a Reply