வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் கருணாநிதி பூரிப்பு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_44214594365சென்னை:””வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் மனவளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு,” என முதல்வர் கருணாநிதி பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.


உகாதியையொட்டி, முதல்வர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழகம், வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் மனவளம் கொண்ட மாநிலம். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இங்கு எப்போதும், எந்த ஒரு இடர்ப்பாடும் எவராலும் வந்ததில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் மனப்பான்மை, புறநானூற்றுப் பாடலில் மட்டுமின்றி, தமிழக மக்களிடமும் இயல்பாக மிளிர்வதை இது காட்டுகிறது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மறுக்கப்பட்ட உகாதி திருநாளுக்கான அரசு விடுமுறையை, 2006க்குப் பின் மீண்டும் இந்த அரசு நடைமுறைப்படுத்தியதோடு, தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு, கன்னட மொழிகள் பயில விரும்புவோருக்கு உரிய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன், தனி வல்லுனர் குழுக்களை அமைத்து தரமான பாட நூல்களையும் தயாரித்து வழங்குகிறது.

கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, சென்னையில் நடந்த சர்வக்ஞர் சிலை திறப்பு விழா ஆகியவை, தமிழக-கர்நாடக மாநில மக்களிடையே நல்லுணர்வை வளர்ப்பதில் பெரிதும் பயன்பட்டுள்ளன. சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர், தமிழக-ஆந்திர மாநிலங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்த உதவுகிறது.சட்டசபை திறப்பு விழாவிற்கு, ஆந்திர, கர்நாடக, புதுவை மாநில முதல்வர்கள் கலந்து கொண்டதும், இம்மாநிலங்களுக்கிடையே நல்லிணக்க மனப்பான்மைகளை வளர்ப்பதில் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.இந்த உறவும், உணர்வும் தென்னக மாநிலங்களிடையே மேலும் வளம்பெற வேண்டும். உகாதி திருநாள் கொண்டாடும் கன்னட, தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *