சேலம்:”தமிழக அரசு, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 556 புதிய பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது’ என, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கனகசபை, நேற்று தெரிவித்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்வதியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழகத்துக்கு இணையாக தரம் உயர்த்தும் பொருட்டு, 139 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் பணி நிறைவடைய உள்ளது.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கூடுதல் பணிக்கு 2,182 பேர் தேவைப்படுகின்றனர்.
முதல் கட்டமாக, 709 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது 556 பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக மருத்துவ அலுவலர் (பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், போதகர்கள்) பணியிடங்கள் 87, மருத்துவம் சார்ந்த பணியாளர் (செவிலியிர், ஆய்வுக் கூட துப்புரவாளர்கள், வாகன ஓட்டுனர்கள், மருத்துவ பணியாளர்கள்) பணியிடங்கள் 279, அமைச்சுப்பணியாளர்(நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர்) பணியிடங்கள் 42, அடிப்படை பணியாகளர்கள் மற்றும் இதர பணியாளர்(ஆண் செவிலிய உதவியாளர், பெண் செவிலிய உதவியாளர், அறுவை அரங்க உதவியாளர்) பணியிடங்கள் 148 ஆக மொத்தம் 556 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வரும் ஆக., 20ம் தேதி நடக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழாவுக்குள், மீதமுள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். இவ்வாறு கனகசபை கூறினார்.
Leave a Reply