சென்னை : ‘விஜயவாடா – சென்னை, சென்னை – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு (காஸ்) கொண்டு செல்ல பைப்லைன் அமைக்கும் பணி, 2012ம் ஆண்டு முடியும்’ என்று, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோரா, லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் வசதியை விரிவுபடுத்தும் வகையில், மொத்தம் 5,523 கி.மீ., தூரத்துக்கு, ஒன்பது புதிய பைப்லைன்கள் அமைக்க, அமைச்சகம் அனுமதித்துள்ளது. தாதரி – நன்கல், சைன்சா – ஹிசார், தபோல் – பெங்களூரு, கொச்சி – கஞ்சிரகோடு – பெங்களூரு – மங்களூரு, ஜக்திஷ்பூர் – ஹல்தியா, விஜயவாடா – நெல்லூர் – சென்னை, காக்கிநாடா – வாசுதேவ்பூர் – ஹவுரா, சென்னை – தூத்துக்குடி, சென்னை – பெங்களூரு – மங்களூரு ஆகிய பைப்லைன் திட்டங்கள் இவை. இதில், தாபோல் – பெங்களூரு, கொச்சி – மங்களூரு, விஜயவாடா – நெல்லூர் – சென்னை, சென்னை – தூத்துக்குடி, சென்னை – பெங்களூரு – மங்களூரு ஆகிய ஐந்து பைப்லைன்கள், தென்மாநிலங்களுக்கு காஸ் வழங்குவதற்கு பயன்படும்.
இவற்றில், 445 கி.மீ., தூரமுள்ள விஜயவாடா – நெல்லூர் – சென்னை பைப்லைன் மற்றும் 670 கி.மீ., தூரமுள்ள சென்னை – தூத்துக்குடி பைப்லைன் ஆகியவற்றை அமைக்கும் பணி, ‘ரிலையன்ஸ் காஸ்’ போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பைப்லைன்கள் அமைக்கும் பணியை 2012ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான அளவு இயற்கை எரிவாயு சப்ளை செய்வதை உறுதி செய்வதை, 2006 ஒழுங்குமுறை சட்டம் வகை செய்கிறது. இவ்வாறு முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
Leave a Reply