சிகாகோ : ஹெட்லி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க அட்டர்னி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மும்பையில், 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்தவன் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் டேவிட் கோல்மென் ஹெட்லி. 1998ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு ஹெராயின் போதை மருந்தை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டான். பின், கடத்தல் கும்பலை பிடிக்க இவன் உதவியதால் இவனது சிறை தண்டனைக் காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப் பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் ஹெட்லியையும், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தகாவுர் ஹுசைன் ராணாவையும் எப்.பி.ஐ.,கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் மும்பைத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தவன் ஹெட்லி என்பது முடிவானது. சுற்றுலாப் பயணி போர்வையில் அடிக்கடி இந்தியா வந்த ஹெட்லி, 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற இடங்களை ஆய்வு செய்ததும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணையின் மூலம் தெரிந்தது. கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஹெட்லி மீது கடந்த ஜனவரி மாதம் சிகாகோ கோர்ட்டில் 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றத்தை ஹெட்லி ஒப்புக்கொண்டுள்ளான், இதனால் ஹெட்லி மரண தண்டனையில் இருந்து தப்பியுள்ளான். தான் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் இதுகுறித்த விசாரணையில் அமெரிக்காவிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஹெட்லியை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஹெட்லிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அட்டர்னி செய்தி தொடர்பாளர் ரண்டால் சம்பார்ன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply