எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பிற்கும் இனி கட்டணம் இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் இனி கிடையாது என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் கல்வி மேம்பாட்டுக்கான அறிவிப்புகள்:

* கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 64 ஆயிரத்து 96 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 341 தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டில் 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 125 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

* பள்ளிகளின் கட்டமைப்பு வசதிக்காக நபார்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி பராமரிப்பு பணிகளுக்காக 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில் மேலும் ஐந்தாயிரம் பள்ளிகளில் 85 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* இதுவரை 4,700 நடுநிலைப் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2,000 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* அனைவருக்கும் கல்வித் திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வரும் நிதியாண்டில், 45 சதவீத செலவை தமிழகம் ஏற்கிறது. இதற்காக, 540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்திலும், 25 சதவீத செலவை தமிழகம் ஏற்கிறது. தமிழக அரசின் பங்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய உயர்நிலைப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் துவக்கப்படும்.

* பெண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள், 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில், ‘படிக்கும் பாரதம்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு நிதியுதவி மற்றும் மாநில அரசின் நிதி பங்குடன், தமிழகத்தில் விழுப்புரம், பெரம்பலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் 68 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக, ‘ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதி’ வரும் கல்வியாண்டில் இருந்து, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வழங்கப்படும்.

* அண்ணாதுரை நூற்றாண்டை முன்னிட்டு, 172 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச நூலகம் வரும் ஜூன் மாதம் முடிந்து பயன் பாட்டுக்கு வரும். மொத்தமாக பள்ளிக் கல்விக்கு 10 ஆயிரத்து 148 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

* அரசு பொறுப்பேற்ற பின், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மூலம், 11 புதிய பொறியியல் கல்லூரிகளும், ஏழு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் துவக்கப்பட்டுள்ளன. கோவை, திருச்சி, நெல்லையில் அண்ணா பல்கலை துவக்கப்பட்டுள்ளன.

* மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்காக மதுரையை தலைமையிடமாகக் கொண்டு, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரும் நிதியாண்டில் துவக்கப்படும்.

* விழுப்புரத்தில், திருவள்ளுவர் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.

* மத்திய அரசு உதவியுடன், ஏழு புதிய பல தொழில்நுட்பக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும். மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் ஒரு பலதொழில்நுட்பக் கல்லூரியும் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும்.

* இந்த அரசு, இதுவரை 2,515 விரிவுரையாளர்களும், பொறியியல் மற்றும் பலதொழில்நுட்பக் கல்லூரிகளில் 279 விரிவுரையாளர்களும் நியமித்துள்ளது. ‘ஷிப்டு’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* வரும் கல்வியாண்டில் இருந்து அரசு கல்லூரிகளில் எம்.ஏ., – எம்.எஸ்சி., போன்ற முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

* பண்ருட்டி, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் துவக்கப்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள், 93 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

* அரசு பொறியியல் மற்றும் பலதொழில்நுட்பக் கல்லூரிகளில், மூன்று கோடி ரூபாய் செலவில் 50 வகுப்பறைகள் கட்டப்படும். 10 அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்கள் கட்டவும், 19 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மூன்று கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்புத் தகுதி மையம் அமைக்கப்படும். இதற்காக அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும். உயர்கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1,751 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *