சென்னை:’வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்’ என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு, அரசு காப்பீட்டுத் தொகை செலுத்த பட்ஜெட்டில் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘108’ அவசரகால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டத்தில் 35 ஊர்திகள் செயல்படுகின்றன. இத்திட்டத் திற்கு 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.அரசு பொறுப்பேற்ற பின் 6,118 டாக்டர்கள், 7,042 செவிலியர்கள், 2,980 பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 117 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ரத்த உறையாமையால் பாதிப்புக்குள்ளாகும் ஏழை நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும்.அரசு மருத்துவமனைகள் 506 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலக வங்கியிடமிருந்து மேலும் 627 கோடி கூடுதல் நிதியுதவி விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
சென்னையில் மத்திய சிறை இருந்த இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இக்கல்லூரியில் விடுதிகள், கூட்ட அரங்கும் 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய்த்துறை உயர் மையமாக தரம் உயர்த்தப்படும். 17 கோடி ரூபாய் மதிப்பில் 150 உள்நோயாளிகள் சிகிச்சை வசதி கொண்ட புற்றுநோய் மையம் கட்டப்படும்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறை தரம் உயர்த்தப்படும். பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மொத்தம் 3,889 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply