திண்டுக்கல்:தமிழகத்தில் முதன் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் நடந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறன் உடையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழங்குவதற்கான முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.
இதில் 1363 மாற்று திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களிடம் கல்வித்தகுதி, தொழில்கல்வி விபரம், ஊனத்தின் விபரம், எந்த வேலை செய்ய முடியும், முன்அனுபவம், எதிர்பார்க்கும் சம்பளம், சுயதொழில் செய்வதாக இருந்தால் எந்த தொழில் செய்வீர்கள், இதற்கு தேவைப்படும் கடன் விபரம், உதவி உபகரணம், பயிற்சி எது தேவை என்று கேட்கப் பட்டது. இந்த அடிப்படையில் வேலை கேட்டு வந்தவர்கள் பிரித்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
முகாமை துவக்கி வைத்து கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மனதில் குறைபாட்டுடன் உள்ளவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும் போது, அவர்கள் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. அரசுத்துறையில் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் மாற்று திறனாளிகளை சுமையாக கருதாமல் சுகமாக கருத வேண்டும்.
முடிந்தளவு யாரையும் புறக்கணிக்காமல் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். 67 தொழிற் சாலைகள், 12 ஆஸ்பத்திரிகள், பள்ளி, கல்லூரி, 11 வங்கிகள் சார்பில் அலுவலர்கள் பங்கேற்றனர். மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் கம்ப்யூட்டர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளையும் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். எஸ்.பி., முத்துச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
202 பேருக்கு வேலை:முகாமில் பேப்ரிக் செக்கிங், தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர், வார்டன், சட்ட ஆலோசகர், அக்கவுண்டன்ட் உட்பட தொழில்நுட்ப பணிகளுக்கு 68 பேர் உட்பட 102 பேருக்கு வேலை வாய்ப்பிற்கான உத்தரவு வழங்கப்பட்டது. 100 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 170 பேருக்கு 36 லட்சம் ரூபாய் கடன் வழங்க உத்திரவாதம் அளிக்கப்பட்டது.104 பேரை உறுப்பினராக கொண்ட ஆறு சுய உதவிக்குழுக்கள் அமைக்கப் பட்டது.120 பேருக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.
Leave a Reply