ஊட்டி:”இந்தியாவில் முதல் முறையாக ஊட்டி அல்லது குன்னூரில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மென் பொருள் ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்,” என மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளை பார்வையிட்டு, புதிய திட்டங்களை அறிவித்த பின், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா, ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தேசிய அளவில் பல பகுதிகளில் மென்பொருள் பூங்காக்களை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பப் பயிற்சிகளை அளிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக் கப்படும். 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த மையம், இந்தியாவில் முதல் முறையாக, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அல்லது குன்னூரில் அமைக்கப்படும்.இதற்கான இடம் தேர்வு குறித்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஊட்டியில் ஒரு இடமும், குன்னூரில் ஒரு இடமும் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. இதன் இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், இந்த மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படும். 2010-11ம் நிதியாண்டுக் கான திட்டத்தில் இது இடம் பெறும்.
இதில், நேரடியாக 500 பேருக்கு வேலைவாய்ப்பும், மறைமுகமாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்தில் பெரிய கட்டடங்கள் அமைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து தற்போது எவ்வித முடிவும் சொல்ல முடியாது.கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டின் போது, சிறப்பு தபால் தலை வெளியீடு மற்றும் தொழில் நுட்ப மாநாடு நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜா கூறினார்.
Leave a Reply