சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டணம் மாற்றி அமைத்தல் மனு மீது, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் நடக்கிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம், வரும் 1ம் தேதியிலிருந்து நுகர்வோர் வகையினர் ஒரு சிலருக்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக ஆணையம், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், ஆணையத்தின் முன் ஆஜராகி, மறுப்புகளையும், கருத்துகளையும் கூறலாம். விருப்பம் உடையவர்கள் அந்தந்த நாட்களில் கூட்டம் நடக்கும் இடத்தில், காலை 9 மணியிலிருந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். வரும் 30ம் தேதி (இன்று) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ராணி சீதை ஹாலிலும், அடுத்த மாதம் 8ம் தேதி காலை 10.30 மணி முதல் 5 மணி வரை மதுரையில் தமிழ்நாடு வணிகர் கழகம் பவள விழா அவைக் கூடத்திலும் கருத்து கேட்புக் கூட்டம் நடக்கவுள்ளது.
அடுத்த மாதம் 13ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கத்திலும், திருச்சியில் அடுத்த மாதம் 15ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கரூர் புறவழிச்சாலை தாஜ் திருமண மண்டபத்திலும் கருத்து கேட்புக் கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Leave a Reply