மே 3ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பம்; ஜூன் 28ல் கவுன்சிலிங்

posted in: கல்வி | 0

tblgeneralnews_72057741881சென்னை : ”பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதல் வழங்கப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.

தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இடம் பெறும் விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகங்கள் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், வரும் 15ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். மே 30ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிட வேண்டும். பொதுவாக ஒரு பல்கலைக் கழகத்தில் தேர்வு நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுவதால் உயர் படிப்புகளில் சேருவதில் சிரமம் உள்ளது என்ற புகார் இருந்தது. இம்முடிவால், அப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே 2ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதல் 29ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 15ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டு, ஜூன் 18ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

கவுன்சிலிங் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை நடைபெறும். கவுன்சிலிங் 28 நாட்களில் முடிக்கப்படும். கடந்த ஆண்டை விட, 16 நாட்கள் முன்னதாகவே கவுன்சிலிங் முடிக்கப்படுகிறது. அண்ணா ஒருமைப் பல்கலைக் கழக சட்ட முன்வரைவு மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். திறந்தவெளி பல்கலைக் கழகங்களின் நோக்கம், படிப்பு கொடுப்பது தான்; வேலை கொடுப்பதில்லை. அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்கள் திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் சேரலாம். வேலை தேடுபவர்கள், தொலைதூரக் கல்வியிலும், ரெகுலர் கல்லூரிகளிலும் சேர்ந்து பட்டம் பெறலாம். இவ்வாறு பொன்முடி கூறினார்.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை பொறியியல் கவுன்சிலிங் நடந்தது. ஆனால், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் முன்னதாக ஜூன் 28ம் தேதி துவங்கி, ஜூலை 25ம் தேதி முடிகிறது. இதன்மூலம் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை உரிய நேரத்தில் துவக்க முடியும். கடந்த ஆண்டு பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 115 பேர், பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 5,216 பேர், வெளிமாநில மாணவர் பிரிவில் 4,933 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேர் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்படுகின்றன.

பொறியியல் கவுன்சிலிங் அட்டவணை

மே 2: பி.இ., – பி.டெக்., மாணவர் சேர்க்கை அறிவிப்பு
மே 3: விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்
மே 29: விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்
மே 31: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்
ஜூன் 15: ரேண்டம் எண் வழங்குதல்
ஜூன் 18: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
ஜூன் 28: பொறியியல் கவுன்சிலிங் துவக்கம்
ஜூலை 25: பொறியியல் கவுன்சிலிங் முடிவு

மருத்துவ கவுன்சிலிங்கிற்கு மே இறுதியில் விண்ணப்பம்: பொறியியல் கவுன்சிலிங் பற்றிய அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும், கவுன்சிலிங் எப்போது நடைபெறும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலாவிடம் கேட்டபோது, ”மே மாத இறுதியில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூன் மாத கடைசியில் கவுன்சிலிங் நடைபெறும். இந்த ஆண்டு விழுப்புரம், திருவாரூர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை துவங்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு 18 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. இம்முறை 20 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *