சட்டசபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்ட, தி.மு.க., நான்கு ஆண்டுகளாக முயற்சித்து, தற்போது தான் செஞ்சுரி அடிக்க முடிந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து, தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2006 பொதுத்தேர்தலின் முடிவின்படி, தி.மு.க., 96 இடங்களையும், அ.தி.மு.க., 61 இடங்களையும், காங்கிரஸ் 34, பா.ம.க., 18, மார்க்சிஸ்ட் 9, இந்திய கம்யூனிஸ்ட் 6, ம.தி.மு.க., 6, விடுதலைச் சிறுத்தைகள் 2, தே.மு.தி.க., ஒன்று, சுயேச்சை ஒன்று என கைப்பற்றி இருந்தன. இந்நிலையில், தி.மு.க., அமைச்சரவை அமைக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் இறந்தார்.இதையடுத்து, மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது துவங்கிய தி.மு.க.,வின் வெற்றி தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது.கூட்டணி கட்சி என்பதற்காக, மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் இறந்த போது, அந்த தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தது தி.மு.க., அதேபோல, தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை கண்ணப்பன் ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.,வுக்கு வந்ததும், அந்த தொகுதியையும் காங்கிரசுக்கு தி.மு.க., விட்டுக் கொடுத்தது.இப்படி விட்டுக் கொடுத்ததால், காங்கிரசின் எண்ணிக்கை தற்போது 36 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், கட்சி மாறுதல்களால் ஏற்பட்ட இடைத்தேர்தல்களில் தி.மு.க., தொடர்ந்து பலனடைந்து வந்தது. ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.,வுக்கு மாறியதாலும், தம்பிதுரை எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததாலும், கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தி.மு.க.,வுக்கு தாவியதாலும் ஏற்பட்ட காலியிடங்கள் தி.மு.க.,வின் எண்ணிக்கை உயர காரணமாக அமைந்தன.கடைசியாக, வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் போது, இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி, தி.மு.க., சட்டசபையில் சதம் அடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடியும் நிலையில், பென்னாகரம் தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியண்ணன் மரணமடைந்தார். இதனால், தி.மு.க.,வின் சதமடிக்கும் கனவு தாமதமானது.
இந்நிலையில், பென்னாகரம் தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்றிருப்பதன் மூலம், சட்டசபையில், சபாநாயகருடன் சேர்த்து தி.மு.க.,வின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வின் பலம் 57 ஆகவும், ம.தி.மு.க.,வின் பலம் மூன்றாகவும் குறைந்துள்ளது. இந்த 57 எம்.எல்.ஏ.,க்களிலும், அ.தி.மு.க.,வில் இரண்டு பேர், தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டு, தி.மு.க.,வின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
தற்போதைய நிலையில், தி.மு.க.,வின் பலம் 100 என்றாலும், எக்கட்சியையும் சாராமல் உள்ள எஸ்.வி.சேகர், விடுதலைச் சிறுத்தைகளின் இரண்டு உறுப்பினர்கள், அ.தி.மு.க.,வில் இருவர், சுயேச்சை ஒருவர் என, அக்கட்சிக்கு முழு அதரவளிப்பவர்கள் உள்ளனர். இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருந்தாலே, தி.மு.க., சட்டசபையில் தனி பெரும்பான்மை பெற்றுவிடும்.காங்கிரசையோ, பா.ம.க.,வையோ இனி நம்பியிருக்க தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு மூன்று எம்.பி.,க்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி.,க்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
Leave a Reply