புதுடில்லி:மிகப் பெரிய உருக்கு உற்பத்தியாளர்களான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செய்ல்), ஜே.எஸ். டபிள்யூ., மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர் வால், தங்கள் உற்பத்திப் பொருளின் விலையை, டன்னுக்கு 2,500 ரூபாய் உயர்த்தியது.
இதுகுறித்து, ‘செய்ல்’ தலைவர் எஸ்.கே.ரூங்டா கூறுகையில், ‘மூலப்பொருட்களின் விலை உயர்வால், உருக்கின் விலையை டன்னுக்கு 2,000 முதல் 2,500 ரூபாய் வரை உயர்த்தி உள்ளோம்’ என்றார்.தனியார் உருக்கு உற்பத்தியாளர்களான ஜே.எஸ்.டபிள்யூ., மற்றும் எஸ்ஸார் ஆகிய நிறுவனங்களும், தங்கள் உற்பத்திப் பொருளின் விலையை உயர்த்தியுள்ளதை உறுதிப்படுத்தின. உலகின் ஆறாவது பெரிய உருக்கு உற்பத்தியாளரான டாடா ஸ்டீல், விலை உயர்வு குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மற்ற உருக்கு உற்பத்தியாளர்களை போன்றே, தாங்களும் விலை உயர்த்தி உள்ளதாக, எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த விலை உயர்வுகள், கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.உலகளவில், உருக்கு உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான இரும்புத் தாது மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனாலேயே, இந்திய சந்தையிலும், உருக்கின் விலை அதிகரித்துள்ளதாக ரூங்டா தெரிவித்தார்.உருக்குத் துறை அமைச்சர் வீர்பத்ர சிங் கூறுகையில், ‘திடீரென உருக்கு விலை அதிகரித்துள்ளது. ஆனால், இது தற்காலிகமானது. உருக்கின் விலை, அளவுக்கு அதிகமாக உயர்ந்தால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Leave a Reply