சென்னை:”தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., உறுப்பினர் காமராஜ், காங்., உறுப்பினர் ராமன், இந்திய கம்யூனிஸ்ட் சிவபுண்ணியம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் பொன்முடி பேசியதாவது:கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, தர்மபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் புதிய கலைக் கல்லூரிகளை ஆரம்பிக்கவும், வேலூரில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு உரிய நிதியும், அனுமதியும் கொடுத்ததும் கல்லூரிகள் துவங்கப்படும். மொத்தம் 27 இடங்களில், புதிய கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆரணியில் புதிதாக அண்ணா பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கலசப்பாக்கம் தொகுதியில் கல்லூரி துவக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட அதிகமான உயர்கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டியிலும், பள்ளிப்பட்டு தொகுதியிலும் புதிய கல்லூரி துவங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Leave a Reply