இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ராஜபட்ச கூட்டணி

posted in: உலகம் | 0

rajapakseகொழும்பு,​​ ஏப்.9:​ இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது.​ இதில் வெற்றி பெற்று அதிபராக மீண்டும் மகிந்த ராஜபட்ச தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.​ காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.​ மொத்தம் 50 சதவீத வாக்குகள் பதிவாயின.

196 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தேர்வு செய்வதற்காக இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.​ மொத்தம் 7,620 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,​​ முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

தேர்தல் பணியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.​ ​

வாக்குப்பதிவுக்காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 11,155 ஆகும்.​ வாக்குகளை எண்ணுவதற்காக 1,387 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.​ வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்தநிலையில் வியாழக்கிழமை மாலை முதல் வாக்குகள் எண்ணும் பணிகள் துவங்கின.

வியாழக்கிழமை நள்ளிரவு முதலே தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கின.​ வெள்ளிக்கிழமை மாலை பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ராஜபட்ச தலைமையிலான அணி மொத்தமுள்ள 225 இடங்களில் 117 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் பிடித்தது.

மொத்தம் 180 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் 117 இடங்களை ராஜபட்ச அணி பிடித்தது.​ 46 இடங்களை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி கைப்பற்றியது.

12 இடங்களை விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டணியும்,​​ 5 இடங்களை இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியும் வென்றன.

இன்னும் 45 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.​ இந்த முடிவுகள் அறிவிக்கப்படும்போது 3-ல் 2 பங்கு இடங்களை ராஜபட்ச அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் லஷ்மண் யாபா அபிவர்த்தனே கூறியதாவது:​ நாங்கள் ஏற்கெனவே தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம்.​ எப்போதும் இல்லாத அளவுக்கு பலமான வெற்றியை அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கொடுத்துள்ளனர் என்றார் அவர்.

ஆட்சியைப் பிடிப்பதற்கு 113 இடங்களைப் பெற்றாலே போதுமானது.​ இந்த நிலையில் 117 இடங்களை ஏற்கெனவே ராஜபட்ச அணி கைப்பற்றியுள்ளதால் அந்த அணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள இடங்கள் 225.​ இதில் 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கலாம்.​ மீதமுள்ள 29 இடங்கள்,​​ கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.

ஜெயசூர்யா வெற்றி:​​ இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா,​​ ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மடாரா தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்தில நுழைகிறார்.

அவர் மொத்தம் 74,353 வாக்குகள் பெற்று வெற்றி கண்டார்.​ தேர்தலின்போது பிரசாரம் செய்த அவர் வாக்கு எண்ணிக்கையின்போது இலங்கையில் இல்லை.​ அவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.​ ஆனால் தபால் மூலம் தனது வாக்கை அவர் செலுத்தினார்.

கடந்த தேர்தல்:​​ 2004-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது.​ ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அணி அப்போது 82 இடங்களை மட்டுமே பிடித்தது.

தமிழ் தேசிய கூட்டணி:​​ கடந்த 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி 22 இடங்களைப் பிடித்தது.​ ஆனால் 2010 தேர்தலில் அந்த அணி 12 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *