பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வெட்டுத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை

posted in: மற்றவை | 0

m12leftபுதுதில்லி, ஏப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் நிதி மசோதா மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

÷இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க எதிர்க்கட்சிகளின் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் இடதுசாரி கட்சிகள்,முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி,லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம்,அதிமுக,தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம், ராஷ்ட்ரீய லோக்தளம், இந்திய தேசிய லோக்தளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சி வரும் 15-ம் தேதி தொடங்குகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்ஸலைட்டுகளால் 76 மத்திய படை வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் இந்த கூட்டத் தொடரில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சி குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. ÷குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது கடந்த மாதம் விதிக்கப்பட்ட வரிகளை விலக்கிக் கொள்ள அரசுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவும் முடிவு செய்துள்ளன. அதில் ஒன்று நிதி மசோதா மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வருவதாகும்.

இவ்வாறு வெட்டுத் தீர்மானம் கொண்டு வருவது அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. இந்த வெட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அரசு பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

எனவே வெட்டுத் தீர்மானம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக பாஜக அணி அல்லாத எதிர்க்கட்சிகள் தில்லியில் திங்கள்கிழமை கூடுகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான

ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இவ்வாறு பாஜக அணியில் இல்லாத எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைவது இது முதல்முறை.

÷இந்த எதிர்க்கட்சி அணி வெட்டுத்தீர்மானம் கொண்டு வரும் நிலையில் அதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் வெட்டுத் தீர்மானம் கொண்டு வர விரும்புகின்றன. எனவே நாங்கள் ஒன்றிணைந்து வெட்டுத் தீர்மானம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த விவகாரத்தில் மூன்றாம் அணியிலிருந்து விலகிய சமாஜவாதி கட்சி தற்போது மீண்டும் அந்த அணியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது.

÷சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் திங்கள்கிழமை நடைபெறும் தில்லி கூட்டத்தில் பங்கேற்கிறார்.

“இந்தக் கூட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக அல்ல. அரசின் நிலைத்தன்மையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்படவில்லை. ஆனால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசுக்கு முடிந்தளவு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது’ என்றார் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.

வெட்டுத் தீர்மானத்துக்கு பாஜகவின் ஆதரவைப் பெறுவதற்கு இந்த கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால்

பாஜகவின் ஆதரவைப் பெறுவதை சமாஜவாதி கட்சி கடுமையாக எதிர்க்கிறது. “பிரதான எதிர்க்கட்சி ஆளும்கட்சியின் துணைக் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது’ என்று சமாஜவாதி கட்சி செய்தித் தொடர்பாளர் மோகன் சிங் கூறினார்.

அதேநேரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

திங்கள்கிழமை நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த கட்சியிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.

பந்த் போராட்டம்: பெட்ரோல், டீசல் மீதான வரியைத் திரும்பப் பெறக் கோரி ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்தும் திங்கள்கிழமை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *