விவாகரத்துக்குப்பின் மனைவி வீட்டில் கணவன் வசிக்கலாம்: கோர்ட் தீர்ப்பு

posted in: மற்றவை | 0

மும்பை : விவாகரத்து கோரிய தம்பதிக்கு அதை வழங்கிய கோர்ட், மனைவியின் பெயரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் தொடர்ந்து வசிக்கலாம் என, உத்தரவிட்டது.

மும்பையைச் சேர்ந்தவர்கள் சரத் மற்றும் மீனா. தற்போது 60 வயதை எட்டியுள்ளனர். இவர்கள் 1969 ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தைகள் பிறந்த பின் சரத் – மீனா இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. தன் கணவரை விட்டுப் பிரிந்த மீனா, 1980ல் டில்லிக்கு மாறினார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது, மீனாவின் பெயரில் மும்பையின் புறநகர்ப் பகுதியான ஜுகுவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வாங்கப்பட்டது. பிரிந்தவுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு உரிமை கோரி, மும்பை சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் சரத். கடந்த 1981ல் இந்த வழக்குத் தொடரப்பட்டது. ஒரு வழியாக இந்த வழக்கில், சமரசத் தீர்வு எட்டப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பை இரண்டாகப் பிரிக்க இருவரும் ஒப்புக் கொண்டனர். அதன்படி இரு குடியிருப்புகளாக மாற்றினர். அதை கோர்ட்டும் ஏற்றுக் கொண்டது.

இதன்பின், 1997ல், சரத்திடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி, குடும்ப நல கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் மீனா. தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கணவர் கொடுமைப்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். குடும்ப நல கோர்ட்டும் விவாகரத்து வழங்கியது. இருந்தாலும், தன்னை வீட்டிலிருந்து வெளியேற்ற மீனாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சரத்தின் கோரிக்கையை ஏற்க, கோர்ட் மறுத்து விட்டது. இதையடுத்து, ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் சரத். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில், இருவருக்கும் விவாகரத்து வழங்கிய நீதிபதிகள், மீனா பெயரில் வாங்கிய குடியிருப்பை, இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என, முன்னர் சிவில் கோர்ட் வழங்கிய தீர்ப்பை அங்கீகரித்தனர். குடியிருப்பில் இருந்து, சரத்தை வெளியேற்ற முடியாது என்றும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *